சேகர்ரெட்டிக்கு ரூ.33 கோடி புதிய நோட்டு கிடைத்த மர்மம் – கண்டுபிடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறல்
தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சில நூறு கோடி ரூபாய்க்கு ரொக்கப் பணமும், நகைகளும் கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. பெட்டி, பெட்டியாக இருந்த நகை, பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆயவு செய்த போது ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் இருப்பது தெரிய வந்தது. வங்கி ‘சீல்’கள் கூட அகற்றப்படாமல், அச்சடிக்கப்பட்ட இடத்தில் இருந்து அப்படியே அவை கட்டு, கட்டாக வந்திருப்பதை கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் 8-ந்தேதிக்குப் பிறகுதான் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவை ஏராளமாக அச்சிடப்பட்டு நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகமான ஒரு மாதத்துக்குள் ரூ.33 கோடி அளவுக்கு தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் அளித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.
சேகர் ரெட்டியிடம் விசாரணை செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் பிறகு அவரை கைது செய்தனர். டெல்லியில் அவர் சிறை வைக்கப்பட்டார்.
தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கட்டத்துக்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகளால் புதிய தகவல்கள் எதையும் பெற இயலவில்லை. இதன் காரணமாக ரூ. 33 கோடி புதிய நோட்டுகள் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளால் ஆவண ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையை கூட தயார் செய்ய முடியாமல் போனது.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது 3 மாதங்களுககுள் அதாவது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட வேண்டும் என்பது சட்ட விதியாக உள்ளது. சி.பி.ஐ.யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத காரணத்தால் சேகர்ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் ஜாமீனில் விடுதலை பெற்று வெளியில் வந்து விட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் உண்மையை கண்டு பிடிக்க ரிசர்வ் வங்கியை சி.பி.ஐ. நாடியது. அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், முதலில் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படும். ரிசர்வ் வங்கி, அந்த நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும்.
அவ்வாறு அனுப்பும் போது ஒவ்வொரு வங்கியின் பணக்கிடங்குக்கும் எந்தெந்த சீரியல் எண்கள் கொண்ட ரூபாய் நோட்டுகள் அனுப்பப்படுகிறது என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி குறித்து வைத்துக் கொள்ளும். எனவே சேகர்ரெட்டி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடி புதிய நோட்டுகளில் உள்ள சீரியல் எண்கள் மூலம், அவை எந்த பணக்கிடங்கில் இருந்து சட்ட விரோதமாக பெறப்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று சி.பி.ஐ. நினைத்தது.
ஆனால் ரிசர்வ் வங்கியோ தங்களிடம் அது தொடர்பாக போதிய தகவல்கள் இல்லை என்று கை விரித்து விட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக துருவி, துருவி மேலும் விசாரித்தபோது, நாடு முழுவதும் பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் விபரத்தை, ரிசர்வ் வங்கி குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8-ந்தேதி அறிமுகமாகி சுமார் 1 மாதம் கழித்து டிசம்பர் 2-வது வாரம்தான் சீரியல் எண்கள்படி எந்தெந்த பணக்கட்டு, எந்தெந்த வங்கிகளுக்கு செல்கிறது என்ற தகவலை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.
இதனால் நவம்பர் 8-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 2-வது வாரம் வரை பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வினியோக விபரம் யாரிடமும் இல்லாமலே போய் விட்டது. இப்படி இருக்கும் போது சேகர்ரெட்டி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கி கிடங்கில் இருந்து கிடைத்திருக்கும் என்பது மர்மமாக, புரியாத புதிரான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே சி.பி.ஐ. விசாரணையில் அடுத்த கட்ட நகர்வு இல்லாமல் போய் விட்டது. இது சி.பி.ஐ.க்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply