பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள் நிவாரண கிராமத்திற்கு விஜயம்

வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள மனிதாபிமான நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலனோம்புத் திட்டங்கள் குறித்து கண்டறியவென பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று வவுனியா மெனிக் பார்ம் கதிர்காமம் கிராமத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். கொழும்பிலிருந்து விமானம் மூலம் வவுனியாவுக்கு வருகை தந்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபண்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் பேர்னாட் குஸ்னர் ஆகியோர் தற்போது வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள குடியிருப்பு வசதிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் என்பன குறித்து நேரில் கண்டறிந்து கொண்டார்.

குறுகிய காலத்துக்குள் வவுனியாவை நோக்கி வருகை தந்து கொண்டிருக்கும் இடம் பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கமும், அரச நிறுவனங்களும் ஆற்றி வருகின்ற பணிகள் குறித்து வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வெளிவிவகார அமைச்சர்களுக்கு விளங்கப்படுத்தினார்.

இதனையடுத்து, வவுனியாவில் தற்காலிகமாக நிறுவப்பட்டு இடம் பெயர்ந்து வரும் மக்களுக்காக பணியாற்றும் பிரான்ஸ் நாட்டு வைத்திய சிகிச்சை முகாமைப் பார்வையிட்ட பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் அந்த வைத்தியர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர்.

இவ் விஜயத்தின் போது மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன், தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, வட மாகாண ஆளுநர் டிக்ஸன் தால பண்டார, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply