நலன்புரி நிலையங்களின் நிலைமை தொடர்பில் எம்மால் எதனையும் அறியமுடியாதுள்ளது :ரணில்
வன்னிப் பகுதி மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களின் நிலைமை தொடர்பில் எம்மால் எதனையும் அறிய முடியாமல் உள்ளது. இது தொடர்பான தகவல்களை முதல் தடவையாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் பெறநேர்ந்துள்ளது. அது குறித்து நான் வெட்கமடைகின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளாவது தனக்கு வவுனியா நலன்புரி முகாம்களின் நிலைமை தொடர்பில் தகவல்களை வழங்கியமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். கொழும்பில் அமைந்துள்ள சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கில் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களின் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
சந்திப்பில் கலந்துகொண்ட ல் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தகவல் வெளியிடுகையில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான வசதிகள் மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வது தொடர்பில் இரண்டு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். வெளிநாட்டு இராஜதந்திரிகள் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்துவிட்டு செல்வது முக்கியமான விடயம் என்று இதன்போது ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை அரசியல் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன ? என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்ததும் ஐக்கிய தேசிய கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply