அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக முதலில் கூறி வந்த மருத்துவமனை நிர்வாகம், பின்னர் உடல்நிலை மோசமானதாக கூறியது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பினர். குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வந்தது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போல் உள்ளது. ஆனால் அவர் உடல் உறுப்புக்கள் அசைவற்று இருக்கிறது.

இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை இதுவரை வெளியிடாமல் இருந்தோம். அவரது உடல்நிலை இருந்த நிலையில் இதை வெளியிட வேண்டாம் என்று அமைதி காத்தோம். இப்போது வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் வெளியிட்டுள்ளோம்.

மருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும். இதேபோல் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய வீடியோ உள்ளிட்ட மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை வெளியிடுவோம். இந்த வீடியோவை விசாரணை ஆணையம் கேட்டால் கொடுப்போம்.

ஆர்.கே. நகர் தேர்தலுக்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை. தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறவில்லை. இந்த வீடியோ தொடர்பான முழு விவரத்தை எங்கு கூற வேண்டுமோ அங்கு கூறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply