கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து வருகிறது: தயாராக இருக்க வீரர்களுக்கு அமெரிக்கா உத்தரவு

கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவதாகவும் வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் நேற்று தெரிவித்தார்.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வீரர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக நாட்டின் முக்கிய ராணுவப் படை தளங்களுக்கு ஜிம் மேட்டிஸ் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இறுதி நாளான நேற்று போர்ட் பிராக் பகுதியில் உள்ள முக்கிய படைத்தளத்துக்கு சென்றார். அங்குள்ள 82-வது விமானப்படைப் பிரிவைச் (இளம் வீரர்கள்) சேர்ந்த நூற்றுக்கணக்கான இளம் வீரர்கள் மத்தியில் மேட்டிஸ் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “ டி.ஆர்.பெரன்பாக் அவர்கள் எழுதிய ‘திஸ் கைன்ட் ஆப் வார்: ஏ ஸ்டடி இன் அன்பிரிபேர்டுனெஸ்’ என்ற நூலை (கொரிய போர் முடிந்த 10 ஆண்டுகள் கழித்து வெளியானது) நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்.

சுயமாக ஆய்வுக்கு உட்படுத்தி குறைகளை தெரிந்து கொள்வதற்கு இணையாக, ஏற்கெனவே என்ன தவறு செய்தோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால்தான் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கிறேன்.

கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. ஆனால் போரை தவிர்க்க தூதரக ரீதியாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் எந்த நேரம் போர் மூண்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என்றார்.

தென்கொரியாவில் சுமார் 28 ஆயிரம் வீர்ரகளை அமெரிக்கா நிரந்தரமாக தயார் நிலையில் வைத்துள்ளது. ஆனால் வடகொரியாவுடன் போர் மூண்டால் மேலும் பல ஆயிரக்கணக்கான வீர்ரகளை அனுப்பி வைக்க வேண்டியிருக்கும்.

புதிய பொருளாதார தடை

ஐ.நா.வின் கடும் எச்சரிக்கையை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வடகொரியா மீது பல்வேறு சுற்று பொருளாதார தடைகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கடந்த நவம்பர் 19-ம் தேதி வடகொரியா நடத்தியது. இதையடுத்து, வடகொரியா மீது புதிதாக மேலும் ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதன்படி, வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தங்கள் நாட்டில் உள்ள வடகொரிய தொழிலாளர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இந்நிலையில்தான் மேட்டிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply