தனிக்கட்சி அமைத்தால் மஹிந்த நீக்கப்படுவார்: தயாசிறி ஜெயசேகர
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையை எடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் யாராக இருப்பினும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். இது மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொருந்தும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.ஒன்றிணைந்து செயற்பட இன்றும் வாய்ப்புள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக பயணிப்பதே மஹிந்தவிற்கு ஆரோக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து செயற்படும் பொது அணியினரும் கொள்கை அளவில் எமது உறுப்பினர்களேயாவர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியை பெற்று எதிரணியில் அமர்ந்தவர்கள். ஆகவே அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவே செயற்பட முடியும். எனினும் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா சதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். பொதுஜன முன்னணிக்கு என ஒரு தலைமைத்துவமோ அல்லது தனித்துவமோ இல்லை. அவர்கள் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வர்ணம், கொள்கை மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்களின் ஒருவராக இன்றும் செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படத்தை வைத்துக்கொண்டே மக்களிடம் செல்லவேண்டிய நிலைமை உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு வெளியேறவில்லை. அவர்களின் அணியில் உள்ள உறுப்பினர்களும் அவ்வாறே உள்ளனர். ஒருசிலர் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி ஜனாதிபதியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட்டு வருகின்றனர். எனினும் தனித்து பயணிக்க வேண்டாம் என்ற வார்த்தையையே இப்போதும் நாம் தெரிவித்து வருகின்றோம். தனித்து பயணிப்பதன் மூலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கே பாதிப்பு ஏற்படும். அவர் இன்றும் ஏமாற்றப்பட்டு வருகின்றார். அவரது புகைப்படம் ஒன்றுக்காக அவருடன் சில தந்திரக்காரர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதனை இப்போதாவது மஹிந்த ராஜபக் ஷ விளங்கிக்கொள்ள வேண்டும்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் கட்சியை பலவீனப்படுத்தும் கொள்கையினை முன்னெடுத்தால் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை அழிக்கும் வகையில் வேறு கட்சிகளை ஆதரித்தால் அவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக எமது தலைமைத்தும் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் அதுவேயாகவும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவாக இருந்தாலும் சரி அல்லது வேறு உறுப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் தனிக் கட்சியினை உருவாக்கும் தலைமைத்துவத்தை ஏற்றால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply