வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை வழங்கப்படவில்லை:முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

2017 ஆம் ஆண்டு வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட முழுமையான நிதி மத்திய அரசாங்கத்தால் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.வட மாகாண சபையின் கடந்த ஆண்டுக்கான மூலதன முன்னேற்றம் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2017ம் ஆண்டு வட மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க, உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்து 6 ஆயிரத்து 13 மில்லியன் ரூபா மத்திய திறைசேரியினால் ஒதுக்கீடுசெய்யப்பட்டது.

அதில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை மத்திய திறைசேரியினால் வட மாகாண திறைசேரிக்கு விடுவிக்கப்பட்ட கட்டுநிதி 5 ஆயிரத்து 399 மில்லியன் ரூபா மட்டுமேயாகும்.

இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90 வீதமாகும். கிடைக்கப் பெற்ற நிதி, அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினூடாக முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97 வீதமான பௌதீக முன்னேற்றததைக் கண்டுள்ளன. இதேவேளை, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கீழ் 207 மில்லியன் ரூபா வெவ்வேறு காலப்பகுதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் 64 வீதமான கட்டுநிதி, அதாவது 131.65 மில்லியன் ரூபா கடந்த டிசம்பர் மாதம் வரைவிடுவிக்கப்பட்டிருந்தது. எஞ்சியுள்ள 75.16 மில்லியன் ரூபா தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்திலிருந்து வட மாகாணத்திற்கு விடுவிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

கொடுத்த நிதிக்கு மேலாகவும் உரியவாறும் இது வரையில் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் தமக்கு உறுதியளித்த மொத்த நிதியையும் வழங்கவில்லை என முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு வட மாகாண சபை பெறவேண்டிய நிதியில் ஆயிரத்து 50 மில்லியன் ரூபா நிதி, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அரசாங்கத்தால் வழங்கி முடிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply