ஒற்றையாட்சி இலங்கையா? தமிழ் ஈழமா?
நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். ஒற்றையாட்சி இலங்கையா? அல்லது தமிழ் ஈழமா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமையும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கடவத்தையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து நாட்டை இரண்டாகப் பிரித்து தமிழ் ஈழம் அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளது. எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது தமிழ் ஈழத்திற்கு இடமளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளது.
எனவே தமிழ் ஈழம் அமைத்து நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதாயின் தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும்.
நாடு தற்போது மிகவும் பாரதூரமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சகல துறைகளிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. பொருளாதாரம் சீரழிந்துள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சியும் அதற்கெதிராக குரல் கொடுப்பதாக இல்லை. எனினும் எமது ஆட்சிக்காலத்தில் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் சென்றோம். அவ்வாறு முன்னேற்றிய நாடு பாதாளம் நோக்கிப் பயணிப்பதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே தான் நாம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
நாட்டில் முறையான ஆட்சியைக் காண முடியாதுள்ளது. அமைச்சர்களுக்கிடையில் குழப்பம். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பனிப்போர் நடைபெறுகிறது. எனவே அரசாங்கத்திடம் முறையான கொள்கைத் திட்டம் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply