“இன்றைக்குள் வேலைக்கு திரும்பினால் நடவடிக்கை கிடையாது” : அமைச்சர் விஜயபாஸ்கர் ‘கெடு’
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், தலைமைச் செயலாளர் (பொறுப்பு) சண்முகம் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 23 முறை நடந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. முன்னதாக அவர்கள் கோரியபடி ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்க கோரிய தொகையில் ரூ.1,250 கோடி வழங்கப்பட்டது.
பின்னர் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடத்தப்பட்டது.
ஆரம்ப நிலையில் பணிக்கு சேர்பவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800 என்ற சம்பள விகிதத்தை ரூ.900 உயர்த்தி ரூ.17 ஆயிரத்து 700 வழங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு வழங்கப்பட்ட 5.5 சதவீதம், இப்போது வழங்கப்பட்ட 2.44 மடங்கையும் சேர்த்துப்பார்த்தால் 2.57 மடங்கு வந்துவிடும். அரசு ஓட்டுனரின் சம்பளம் ரூ.33 ஆயிரத்து 930. ஆனால் போக்குவரத்து கழக டிரைவரின் சம்பளம் ரூ.34 ஆயிரத்து 77.
அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் வரும் போது தான் அவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கிறது. ஆனால், இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.584 கோடி. அதில், பொங்கலுக்குள் ரூ.204 கோடியை அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மீதத் தொகை படிப்படியாக ஒரு சில நாட்களுக்குள் தரப்பட்டுவிடும்.
23 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து ஒப்பந்தமும் போட்ட பிறகு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. கொல்லைப்புறம் வழியாக வந்து கையெழுத்து பெற்றதாக கூறுவதும் தவறு.
வெளியில் இருந்து வந்த ஓட்டுனர்களை வைத்து பஸ்களை ஒட்டுவதாகவும், விபத்துகள் நடப்பதாகவும் கூறுகின்றனர். பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு சில நடவடிக்கையை மேற்கொண்டு தான் ஆகவேண்டியுள்ளது. விபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே 22 இடங்களில் பஸ்களை நடுவழியில் நிறுத்தி விட்டு பயணிகளை தவிக்க விட்டனர். பெண்களும், குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் சிலர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் அனைவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் நோட்டீசு என்பதால் பதிலுக்கு காத்திருக்கிறோம். போக்குவரத்து ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை (அதாவது இன்று) வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நாளைக்குள் (இன்றைக்குள்) வேலைக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
பொங்கல் பண்டிகையின் போது பயணிகளுக்கு பிரச்சினை வராத அளவுக்கு தெற்கு ரெயில்வேயிடம் சிறப்பு ரெயில்கள் விட கோரியிருக்கிறோம். அதுதவிர வேறு ஏற்பாடுகளும் கைவசம் உள்ளன.
தமிழகம் முழுவதும் 80 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் சற்று குறைவான அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply