யாழில் கரையொதுங்கிய தாய்லாந்து நாட்டின் சாவுக்குடில்: மக்கள் ஆச்சரியம்!
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்கரையில் தாய்லாந்து நாட்டு மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.மூங்கிலால் அமைக்கப்பட்ட தளத்தில் அமைக்கப்பட்ட சிறிய வீடு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியதாக சொல்லப்பட்டுள்ளது. கடலில் இது காணப்பட்டபோது யாதாயினும் ஒரு படாகாக இருக்கலாம் எனச் சந்தேகித்த மீனவர்கள் அதனை அண்மித்து பார்த்தபோது அது ஒரு மூங்கில் வீடாக இருப்பதைக் கண்டு அதனைக் கரைக்கு கட்டி இழுத்துவந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் கொடியுடன் காணப்படும் குறித்த மூங்கில் வீடானது தாய்லாந்து மக்களின் பிதிர்க் கடனுக்காக அமைக்கப்பட்ட வீடாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சிறிய குடிலின் நடுவே கிண்ணம் ஒன்று காணப்பட்டதுடன் அதனைச் சுற்றி அரிசி உள்ளிட்ட தானியப் பொருட்கள் சிதறிக் காணப்பட்டுள்ளன.
இதேவேளை தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவற்றிற்கு இடையில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் நிகழக்கூடிய நீரோட்டம் காணப்படுவதாகவும் இந்த நீரோட்டத்தின் காரணமாகவே இது இவ்வாறு இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்கரைகளில் இதற்கு முன்னரும் இவ்வாறான மூங்கில் வீடுகள் கரையொதுங்கியதாகவும் குறிப்பிட்ட மீனவர்கள் கடந்த 1990 காலப்பகுதிகளில் இறந்த உடல்களுடன் இவ்வாறான ஒரு மூங்கில் வீடு மிதந்து வந்தபோது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி அதனை கரைக்கு இழுத்துவந்து உடல்களை தகனம் செய்ததாக கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் புராதன இலங்கையின் மன்னர்களுக்கும் தாய்லாந்து மன்னர்களுக்குமிடையில் மிக நெருக்கமாக நிலவிய வணிகத் தொடர்புகளுக்கு இந்த நீரோட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படும் அதேவேளை பிற்காலச் சோழர் காலத்தில் இந்த நீரோட்டத்தைப் பயன்படுத்தியே தென்கிழக்காசிய நாடுகளை சோழப் பேரரசு ஆக்கிரமித்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply