இந்தியாவில் இளைஞர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் பிரதமர் பேச்சு
டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:–
இளைஞர்களால் இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதே நேரம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப நாம் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை அரவணைத்து செல்வதும் மிக முக்கியம். கண் மூடித்தனமாக நம்பிக்கை சரியானது அல்ல.
தூய்மை இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் லட்சிய நோக்கத்தில் இணைந்து செயல்பட அனைவரும் முன்வர வேண்டும். ஏனென்றால் மகாத்மா காந்தி கண்ட தூய்மை இந்தியா என்ற கனவை நனவாக்குவது நமது அனைவரின் கடமையும் ஆகும்.
நாட்டின் பாதுகாப்புக்காக நமது படை வீரர்கள் உழைப்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. நாட்டிற்காக சேவை செய்த படை வீரர்கள் குறித்து உத்வேக உணர்வுடன் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த எத்தனையோ போலீசார் உள்ளனர். எனவே அவர்கள் செய்த தியாகங்களை நாம் கட்டாயம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் நாட்டின் இதர பகுதிகளில் உள்ள அனைவரிடம் இணைந்து பழகி அவர்களிடம் இருந்து வாழ்க்கைக்குரிய அனுபவங்களை பெற வேண்டும். ஏனென்றால் நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. அதனால் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் கற்றுக் கொள்வதற்கு ஏரளாமான விஷயங்கள் உள்ளன.
இந்த குடியரசு தினவிழா நமக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆசியான் நாடுகளின் 10 தலைவர்களும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றது நமக்கெல்லாம் அதிர்ஷ்டமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply