வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியைத் துரிதப்படுத்த இந்தியா உதவி
மனிதநேய உதவிகளுக்கும் அப்பால் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை கூடிய விரைவில் மீளக்குடிய மர்த்துவதற்கு ஏதுவாக கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இந்தியா விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. கடந்த வருடம் மீட்கப்பட்ட மன்னார் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்திசெய்யப் பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித் திருந்தது. இந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஏனைய பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த தமது கண்ணிவெடி அகற்றும் குழுக்களை இலங்கைக்கு அனுப்பத் தீர்மானித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தினரின் கண்காணிப்பில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பமுடியாது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சி.ஆர்.ஜெயசிங்க இந்திய ஊடகமொன்றிடம் கூறினார்.
இலங்கையில் நடைபெற்றுவரும் யுத்தத்திற்கு இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கிவருகிறது எனப் பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில், புல்மோட்டையில் இந்திய இராணுவ வைத்தியர்கள் வைத்தியசாலையொன்றை அமைத்துள்ளனர். இந்த நிலையிலேயே கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கும் தமது குழுக்களை அனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்க 100 கோடி ரூபாவை வழங்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் அறிவித்திருந்ததுடன், இதனைவிட தமிழக அரசாங்கத்திடமிருந்து 25 கோடி ரூபாய்கள் உதவித்தொகையாக வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply