பிணைமுறி விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பார் : த.தே.கூ. பங்கேற்காது
மத்திய வங்கி பிணைமுறி மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதத்தின்போது ஏட்டிக்குப் போட்டியாக ஜனாதிபதி, பிரதமர் களமிறங்குவர். ஜே.வி.பியும் பொது எதிரணியும் விவாதத்திற்கான அதிக நேர ஒதுக்கீட்டை கோரியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதத்தில் பங்கேற்காது என தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விமாதம் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தேர்தலின் பின்னர் 21,22 ஆம் திகதிகளில் அறிக்கை குறித்த விவாதத்தை முன்னெடுக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பினை அடுத்து விவாதத்தை தேர்தலுக்கு முன்னர் நடத்தபடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவாத தினத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சகல கட்சிகளும் பங்கேற்காத நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி , பொது எதிரணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விவாதத்தில் கலந்துகொள்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
விவாதம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறுகையில்
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மற்றும் பாரிய நிதி மோசடி ஊழல் குறித்த குற்றங்களின் மத்தியில் தான் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளன . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழுத்தம் காரணமாகவே இன்று தேர்தலின் முன்னர் விவாதம் ஒன்றை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியன ஒருவருக்கு ஒருவர் கள்ளர்கள் என பழிசுமத்தி வருகின்ற நிலைமையே இந்த விவாதத்தின் போதும் இடம்பெறும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை. நாம் விவாதத்தில் கலந்துகொண்ட போதிலும் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைமையே ஏற்படும். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு இந்த விவாதத்தை குழப்பும் நிலைமை காணப்படும். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் அவர் தெரிவித்து வரும் காரணிகள் அனைத்தின் உண்மை நிலைமையும் அன்றைய தினம் மக்களுக்கு தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில்,
நாம் விவாதத்தை நடத்த தயாராகவே உள்ளோம். தேர்தலின் பின்னர் முழுமையான விவாதம் ஒன்றை முன்னெடுக்கவே கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணையங்க தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் அனைவரின் இணக்கத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளும். நாம் விவாதத்தை எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம். எந்த நிலையிலும் நாம் அஞ்சப்போவதில்லை. மத்திய வங்கி பிணைமுறி குற்றச்சாட்டினை போலவே பாரிய நிதி மோசடி ஊழல் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறுகையில்.
ஊழல் குறித்த அறிக்கைகள் தொடர்பிலான விவாதத்தை நாமே கேட்டோம். ஆகவே இந்த விவாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து மேற்கொண்ட மிகப்பெரிய ஊழல் மற்றும் முன்னைய ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் ஆகியன மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த விவாதத்தில் மக்கள் விடுதலை முன்னணி நிச்சயமாக கலந்துகொள்ளும். எமக்கான விவாத நேரங்களை அதிகரித்து தருமான நாம் கோரிக்கை விடுத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இது குறித்து தெரிவிக்கையில்.
கூட்டு எதிர்க்கட்சி மத்திய வங்கி பிணைமுறி குறித்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டது. அதன் பின்னணியிலேயே அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. எனினும் அம்மோசடிக்கு எதிராக உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி குரல் கொடுக்கவில்லை. அரசாங்கத்தைப் போல் அத்தரப்பும் அதனை மூடி மறைப்பதற்கே முயற்சித்தது. அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடியை சிறியளவிலான மோசடியாச் சித்தரிக்க விளைந்தது. எனவே மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக தொடர்ந்தும் குரல்கொடுத்து வரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு பாராளுமன்ற விவாத்தின் போது அதிகளவான நேரம் ஒதுக்கித் தருமாறு சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற இருப்பினர் எம். எ. சுமந்திரன் இது குறித்து தெரிவிக்கையில்
மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி ஊழல் அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கை மீதான விவாதமும் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் நிதி மீதான ஊழல் குற்றங்கள் குறித்து உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. எனினும் ஆரம்பத்தில் கட்சி தலைவர்கள் கூட்டம் கூடிய நிலையில் இந்த அறிக்கைகள் மீதான விவாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடத்தப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் இப்போது தேர்தலுக்கு முன்னரே விவாதம் நடத்தபடுவதாக கூறப்படும் நிலையில் அதில் எம்மால் கலந்துகொள்ள முடியாத நிலைமைகள் காணப்படுகின்றது. நாம் தற்போது தேர்தல் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதன் காரணமாகவே எம்மால் அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள முடியாத நிலைமைகள் காணப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் விவாதம் ஒன்று நடத்தபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகவே அதனை நாமும் வலியுறுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி விவாதத்தில் கலந்துகொள்வதிலும் சாத்தியப்பாடுகள் இல்லை என தெரிய வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வருகைதருகின்ற போதிலும் விவாதத்தில் கலந்துகொள்வது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply