சைப்ரஸ் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் நிகோஸ் அனஸ்டசியடெஸ்

சைப்ரஸ் மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவாகும். கடந்த 2004-ம் அண்டு மே மாதம் 1-ம் தேதியில் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

இந்நாட்டின் அதிபராக நிகோஸ் அனஸ்டசியடெஸ் (71) கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலம் வருகிற 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இத்தேர்தலில் குடியரசு முன்னணி கட்சியின் சார்பில் தற்போதைய அதிபரான நிகோஸ் அனஸ்டசியடெஸ் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரிகளின் ஆதரவுடன் ஸ்டாவ்ரோஸ் மலாஸ் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே நிகோஸ் அனஸ்டசியடெஸ் முன்னிலை வகித்து வந்தார். முடிவில் நிகோஸ் அனஸ்டசியடெஸ் 56 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக சைப்ரஸ் நாட்டின் அதிபராக நிகோஸ் அனஸ்டசியடெஸ் வருகிற 28-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஸ்டாவ்ரோஸ் மலாஸ் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நிகோஸ் அனஸ்டசியடெசின் வெற்றியை அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply