தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிவகை
தமிழ் மக்களே!
எமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அணி திரள்வீர்!!
அன்பான தமிழ் மக்களே,
இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணா துயரங்கள் நாம் அறிந்த ஒன்றே. இதற்கு ஒரே காரணம், எமது தலைவர்கள் சிலரால் முன் யோசனை எதுவுமின்றி ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் தான் என்பதை, தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்க்கை எடுத்தியம்பி நிற்கின்றது. ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களுக்கு அழிவைத்தவிர வேறு எதையும் கொண்டுவராது என, எமது சமூகத்தில் இருந்த பல அறிஞர்களும், அனுபவசாலிகளும் எடுத்துரைத்தும் அதை ஏற்காது, தமது சொந்த அரசியல் லாபத்துக்காக சில அரசியல் தலைவர்கள் விடாப்பிடியாக அதை ஆரம்பித்து வைத்ததின் விளைவை, எமது மக்கள் இன்று அனுபவித்து நிற்கின்றனர்.
ஜனநாயக வழிமுறைகளினூடாக, அரசியல்ரீதியாகப் போராடிப் பெற்றிருக்க வேண்டிய எமது உரிமைகளை, ஆயுத வன்முறையின் மூலம் நாம் பெற முற்பட்டதின் விளைவாக, எம்மிடம் ஏற்கெனவே இருந்த உரிமைகளையும் இன்று இழந்து நிற்கின்றோம். எமக்குள் நாமே சகோதரச் சண்டைகளை உருவாக்கி, பல பெறுமதி மிக்க உயிர்களை அழித்துள்ளோம். இன்று எமது இனம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற நாம், தாயக விடுதலைக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டு, இந்த நாடுகளில் முகமற்ற மனிதர்களாகவும், இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் வாழ்ந்துகொண்டு, தாயகத்தில் வாழுகின்ற உறவுகளுக்காக செயல்படுகின்றோம் எனக் கூறுவது போலித்தனமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
இருப்பினும் எம்மில் பலர் ஏதோ ஒரு வகையில் எமது தாயகத்திலிருந்து வெளியேறி, தாயகத்தில் வாழும் மக்களை விட, பல்வேறு நாடுகளில் பொருளாதாரரீதியாகவும் பாதுகாப்புரீதியாகவும் ஓரளவு நல்ல நிலையில் வாழ்கின்றோம். ஆனால் இன்று வன்னியில் யுத்தமுனையில் அகப்பட்டுள்ள மக்களின் நிலையோ சொல்லுந்தரமன்று. அவர்கள் உயிராபத்திலிருந்து தப்பமுடியாதபடி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும் இழந்த நிலையில,; அந்த மக்களைத் தடுத்து வைத்திருப்பதற்கு நியாயம் கூறுபவர்கள், இந்த சில ஆயிரம் மக்களை வைத்துப் போராட்டம் நடாத்தி, தனிநாடு ஒன்றை அமைக்கப் போகிறோம் என்று கூறுவது கற்பனைக்கும் எட்டாத விடயமாகும். தப்பியோடுபவர்கள் எல்லோரும் தப்பியோடிவிட, இந்த ஏழை எளிய அப்பாவி மக்களை மட்டும் தடுத்து வைத்திருப்பது, அநியாயமானதும் கண்டனத்திற்குரியதுமாகும். எனவே சந்தேகமின்றி, அவர்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மையாகும். அந்த மக்களின் அவல நிலையை, அவர்களின் பாதுகாப்பை, கவனத்தில் கொள்ளாது புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் எந்தப் போராட்டத்தாலும் பயன் விளையப் போவதில்லை.
யுத்தத்தை நிறுத்தி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண்பதற்கு, கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகள் அனைத்தும், எமது தூரதிருஷ்டியற்றதும், புத்திசாலித்தனம் அற்றதுமான செயல்களால் கைகூடாமல் போய்விட்டன. எமக்கு பல வழிகளிலும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் இந்தியா, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எடுத்த முயற்சியையும் நாம் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். நோர்வே ஊடாக, சர்வதேச சமூகம் செய்ய வந்த உதவியையும் கூட தவறவிட்டுவிட்டோம். 2000ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் முன்வைத்த, ஒரளவு நல்ல அதிகாரப் பகிர்வு யோசனையையும் சிங்கள இனவாத கட்சிகளுடன் இணைந்து நாமே குழப்பினோம். இன்று எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றோம்.
எது எப்படியிருப்பினும் முதலில் எமது மக்களைப் பாதுகாப்பது அவசியமானது. அதற்கு ஒரு அரியவாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, அரசாங்கம் விரைவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சூழலைத் தோற்றுவித்துள்ளது. அதன் மூலம் முதலாவதாக, எமது மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து வந்த அவலத்திலிருந்து விடுபடும் ஒரு வாய்ப்புத் தோன்றியுள்ளது. யுத்தம் அற்றுப் போனபின், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு உள்ளன. அவற்றில் சில அவசியமான உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும்படி, அரசாங்கத்திடம் ஒருமித்த குரலில் நாம் இப்பொழுதிலிருந்தே வலியுறுத்துவது அவசியமானது. அந்த வகையில் பின்வரும் மூன்று முக்கிய பிரச்சினைகளை நாம் அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும்.
1. போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் போதிய நஸ்டஈடு வழங்கப்படுவதுடன், அவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவும் வேண்டும். அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பிக்கும் வரை, அவர்களுக்கு அரசாங்கம் பூரணமான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அந்த மக்களுடைய குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள், மின்சாரம், குடிநீர், வணக்கஸ்தலங்கள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும்.
2. நிராயுதபாணியாக்கப்படும் அனைத்துப் போராளிகளுக்கும் சரியான முறையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். அத்துடன் ஜனநாயக வழிக்குத் திரும்பிய பின்பும், தற்பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் உட்பட அனைத்து பிரிவினரதும் ஆயுதங்கள் களையப்பட்டு, அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் கையேற்க வேண்டும். பொதுமக்கள் ஆயுதக் கலாச்சாரத்தின் அச்சமின்றி வாழும்,முழுமையான ஜனநாயக சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
3. இனப்பிரச்சினைக்கு நிர்தரத் தீர்வு காண்பதற்கு முன்னோடியாக, இந்திய – இலங்கை அரசுகளினதும், தமிழ் தரப்பினதும் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபைக்கு அச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படுவதுடன், வடக்குக்கான மாகாணசபையும் அதனடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். ஆனால் வடக்கு மாகாண சபையின் தேர்தல் நடாத்துப்படுவதற்கு முன்னர், அங்குள்ள மக்கள் புறச் சூழ்நிலையாக மட்டுமின்றி, அகநிலையாகவும் ஒரு இயல்பு நிலையை அடைவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் ஒரு நிம்மதியான சூழ்நிலையில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியும். அவ்வாறில்லாது அவசரக் கோலத்தில் நடாத்தப்படும் தேர்தல்கள் யாவும் தவறான சக்திகள் மீண்டும் தமிழ் மக்களின் தலைமையைக் கைப்பற்றவே வழி சமைக்கும்.
எனவே அனைத்து தமிழ் மக்களும் இந்த விடயங்களை மிகவும் பாரதூரமான விடயங்களாகக் கருதி, ஏகோபித்த குரலில் அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்.
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply