மைத்திரியின் அனுமதி பெற்றே பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி : ஆறுமுகன்
உள்ளூராட்சி சபைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவு டன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இலங்கை தொழிளாலர் காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக மாத்திரமே நாம் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நுவரெலியாவின் 11 சபைகளில் கூட்டணி அமைத்து செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனர். காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் நாம் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். அது குறித்து மக்கள் கவலையடையத் தேவையில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் நாம் அங்கத்தவராக உள்ளோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எமது கூட்டணி பற்றி அறிவிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் தொடர்ச்சியாக எமது மக்கள் சேவைகளை முன்னெடுத்துச் செல்வோம். அதற்கு தற்போதுள்ள புதிய தொகுதி முறை மிக சிறப்பான வாய்ப்பாக அமையும். அதே வேளை போனஸ் ஆசன முறையால் தான் நாம் புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையெனில் எம்மால் தனித்து ஆட்சி அமைத்திருக்க முடியும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர். அவர்களது இடத்தில் இருந்து பார்க்கும் போது பெரும்பான்மை வாக்குகளை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் அது நியாயமானதாகும். எனினும் 4 வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின் படியே நாம் செயற்படுவோம்.
தொடர்ச்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே செயற்படுவோம். ஏனைய எந்த கட்சியிடம் இருந்து இணைந்து ஆட்சி அமைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பிலான பரிசீலனை செய்வதற்கு கூட நாம் தயாராக இல்லை.
பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி குறித்து மக்கள் அதிருப்தி அடையத் தேவையில்லை. நாம் மக்களிடம் இது தொடர்பிலான தெளிவுபடுத்தலினை விரைவில் மேற்கொள்வோம். மக்கள் எதிர் பார்ப்பவை மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அவர்கள் எந்த கூட்டணி பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply