அதிகாரத்தின் தோற்றுவாயாக தகவல்துறை விளங்குகிறது
இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் எமது ஆசிரிய தலையங்கத்தில் இலங்கையில் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தலின் விளைவாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எற்பட்டிருக்கின்ற ஆபத்துக் குறித்தும் அந்த ஆபத்தைப் போக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். அதேவேளை, தகவல்களைக் கையாளுகின்ற விடயத்தில் ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் குறித்து பரவலான விமர்சனங்கள் செய்யப்பட்டுவருவதால் அந்த விவகாரம் குறித்தும் பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதனால், ஊடகவியலாளர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வு குறித்து இன்றைய தினம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள விரும்புகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒருதடவை “அதிகாரத்தின் தோற்றுவாயாக தகவல் விளங்குகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அடிப்படையில் நோக்குகையில், தகவல்களைப் பயன்படுத்துவதற்குக் கடைப்பிடிக்கப்படுகின்ற அணுகுமுறைகள் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய சாதக பாதகங்களைப் பற்றி உருப்படியான முறையில் சிந்தித்து செய்தியாளர்கள் செயற்படுகின்றார்களா என்ற அர்த்தபுஷ்டியான கேள்வியைக் கேட்பதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை இருக்கிறது. அந்தக் கேள்விக்கான பதிலை தனது மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் அளிக்கக் கூடிய திராணி தனக்கு இருக்கிறதா என்று ஒவ்வொரு செய்தியாளனும் தனக்குள் கேட்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறான் என்பது எமது அபிப்பிராயம்.
இன்றைய உலகில் நவீன தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி அதற்கேயுரித்தான உள்ளார்ந்த இயல்புடன் ஊடகங்கள் மத்தியில் பெரும் போட்டா போட்டியை ஏற்படுத்துகிறது. வர்த்தக நலன்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்களின் மட்டுமீறிய தூண்டுதலினால் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுக்கு இடையேயான இந்தப் போட்டாபோட்டி தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவற்றை வெளியிடும் செய்தியாளர்களே அநேக சந்தர்ப்பங்களில் அக்கறைப்படாத துரதிர்ஷ்டவசமான நிலையை உருவாக்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அடிப்படையில் இந்தக் கயிறு இழுப்புக்கு பலியாவது இதழாசிரியப் பெறுமானங்களே (Editorial values) யாகும். தகவல்களை முந்திக்கொண்டு முதலில் கொடுத்துவிட வேண்டும் என்பதில் செய்தியாளர்களுக்கு இயல்பாகவே இருக்கின்ற செயற்துடிப்பின் ஆரோக்கியமான குணாம்சங்கள் அரித்தெடுத்துச் செல்லப்படும் அவலநிலையையும் ஊடகங்களுக்கு இடையேயான போட்டாபோட்டி உருவாக்குகிறது.
ஊடகங்களுக்கு உள்ளிருந்தே தோன்றும் போட்டிகளும் ஊடகங்களுக்கு இடையிலான போட்டிகளும் பல மட்டங்களில் பரவலாக தலைகாட்டுவதால் தகவல்துறையின் அபார வளர்ச்சியின் அனுகூலங்களை மக்கள் முழுமையாக அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது. இன்று உலகில் செய்தி ஊடகங்கள் பாரிய வர்த்தகத் தொழில் துறையாக மாறிவிட்டன. ஆற்றல் மிக்கவர்களைக் கவரக்கூடிய ஒருதுறையாக செய்தித்துறை இன்று வளர்ந்துவிட்டது. இலத்திரனியல் ஊடகங்களின் அதீத வளர்ச்சி காரணமாக உலகம் பூராவும் பத்திரிகைகள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது. தற்போதைய இளஞ்சந்ததி இணையத்துடனேயே வளர்கிறது. அதனால், இலத்திரனியல் ஊடகங்களினால் தோற்றுவிக்கப்படுகின்ற சவால்களைச் சமாளிக்க பத்திரிகைகளை கண்ணைக் கவருபவையாகவும் மாற்ற வேண்டிய தேவையை உணரும் நிறுவனங்கள் வாசகர்களை வசப்படுத்துவதற்குக் கையாளும் அணுகுமுறைகள் விடயதானங்களின் தரத்தை மலினப்படுத்திவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இத்தகைய நிலைமைகள் காரணமாக செய்தியாளர்கள் பெரும் சஞ்சலத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது.
சந்தையின் வெற்றி தோல்வியே மனித நடத்தையின் அடிப்படை நியமமாகக் கணிக்கப்படுகின்ற விபரீதமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கும் உலகமயமாக்கல், வர்த்தக நலன்களுக்கு இடையிலான போட்டா போட்டிகளில் நெறிமுறைகளுக்கும் மனிதாபிமானப் பண்புகளுக்கும் இடந்தராத ஒரு வெற்றிடத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதால் செய்தி ஊடகத்தொழில்துறையும் தவிர்க்க முடியாத வகையில் “சமூகத்துக்கு பதில் கூறும் கடப்பாட்டைத்’ தியாகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இத்தகையதொரு பின்னணியில் தான் சமூகத்தின் நலன்களில் அக்கறையுடைய செய்தியாளர்கள் தங்களின் பணியை பெருவாரியான நெருக்குதல்களுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. சமுதாயத்துக்குப் பதில்கூற வேண்டிய கடப்பாட்டுணர்வைக் கொண்டதும் நெறிமுறைகளில் பற்றுறுதி கொண்டதுமான செய்தித்துறையை வளர்த்தெடுக்க தெளிவாக வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் வழியில் செயற்படுவது அவசியம்.
செய்தி என்பது சரித்திரத்தின் ஒழுங்கமைவு அற்ற முதலாவது வரைவு (First rough draft of history) என்று சொல்லப்படுவதுண்டு. திரிபு இன்றி உண்மையான தகவல்களைக் கூறுதல், சுதந்திரத்துடன் செயற்படுதல், நீதி, மனிதத்தன்மை மற்றும் ஒட்டு மொத்தத்தில் சமூகத்துக்கு நன்மை தரக்கூடிய பங்களிப்பு ஆகியவையே செய்தித்துறைக் கோட்பாடுகளின் அடிப்படைகளாக அமைதல் வேண்டும். “இதழியல்’ (Journalism) இப்போது இடைவெளிகளையும் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கான சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் மாத்திரமே என்றாகிவிட்டதா என்று பிரபல அமெரிக்கச் செய்தியாளர் ஒருவர் அண்மையில் அதிருப்தியுடன் தெரிவித்த கருத்தை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். அதிகாரத்தின் தோற்றுவாயாக தகவல்துறை விளங்குகிறது என்ற கருத்தின் கனதியை உணர்ந்து எமது செயற்பாடுகளைச் சமூகத்தின் நலன்களுக்காக முன்னெடுப்போமாக!
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply