பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்கள்,அமைச்சரவையில் இருப்பதற்கு தார்மீக உரிமை அற்றவர்கள்: ராஜித சேனாரட்ன
பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்கள் அமைச்சரவையில் இருப்பதற்கு தார்மீக உரிமை அற்றவர்கள் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அளுத்கமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பேருவளையில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு ராஜித சேனாரட்ன மன்றத்தினால் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எதிராக செயற்படு பவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு தார்மீக உரிமை அற்றவர்கள்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சரவையில் இருப்பதற்கு முயற்சிக்கின்றனர். பிரதமர் தமக்குத் தேவையில்லையெனக் கூறிக் கொண்டு அரசில் தொடர்ந்தும் இருக்கின்றனர்.
அப்படியான அமைச்சர்கள், அமைச்சரவைக்குத் தேவையில்லை. அமைச்சர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களுக்கு அமைய அமைச்சுப் பதவியை முன்னெடுத்துச் செல்ல சுய திறமை அவசியமானது. மக்களுக்குச் சேவை செய்வதன் அடிப்படையிலேயே அரசாங் கத்தின் அதிகாரம் இருக்க வேண்டும். மனிதநேயம் முக்கியமானதாக இருந்தாலும், மக்களுக்கு சேவையாற்றும்போது அதிகாரம் இருப்பது அவசியமாகிறது.
தமக்கிருக்கும் அதிகாரத்தினால் யாராவது ஒருவர் கஷ்டத்துக்கு உள்ளாவார் ஆயின் அந்த அதிகாரத்தினால் எந்தப் பயனும் இல்லை. நல்லாட்சி அரசாங்கமானது ஒரு தலைவரின் கீழ் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு மாவட்ட, இளைஞர் பிரிவுகள் என சகல பிரிவுகளும் மறுசீரமைக்கப்படும். 2020 தேர்தலை வெற்றிகொள்வதற்குத் தேவையான வகையில் ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படுகிறது. நானும் அந்த செயற்பாடுகளில் இணைகின்றேன். மறுசீரமைப்பு தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்னவும், சதுர சேனாநாயக்க எம்பியும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இது அங்கிருந்த சகலரின் வரவேற்பையும் பெற்றிருந்தது என்றார். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளை தொகுதியின் இணைப்பாளர் இஸ்திகார் ஜமீல், பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply