மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் ஜாதவ் வழக்கில் ஜூலை 17-க்குள் பாகிஸ்தான் பதில் மனு
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசர அவசரமாக பாகிஸ்தான் விசாரித்து மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்பது இந்தியாவின் வாதமாக உள்ளது.
இந்த நிலையில் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச கோர்ட்டை இந்தியா நாடி உள்ளது. அதைத் தொடர்ந்து அவரை தூக்கில் போட சர்வதேச கோர்ட்டு தடை விதித்தது.
இந்த வழக்கு, 10 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அமர்வின் முன் இந்தியா தனது தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக கடந்த 17-ந் தேதி முன் வைத்து உள்ளது. குறிப்பாக, வியன்னா உடன்படிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் 1977-ம் ஆண்டு முதல் கையெழுத்திட்ட நாடுகளாக திகழ்கின்றன; அப்படி இருக்கும்போது, குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளது.
ஆனால் சட்டப்பூர்வமான கைதிகளுக்குத்தான் அந்த அனுமதியை தர முடியும், உளவாளிகளுக்கு அல்ல என்பது பாகிஸ்தானின் வாதமாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியா 17-ந் தேதி முன்வைத்த வாதங்களுக்கு பதில் மனுவை பாகிஸ்தான் ஜூலை 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் தரப்பில் ஏற்கனவே ஆஜரான வக்கீல் கவார் குரேஷி தொடர்ந்து ஆஜர் ஆகி வாதிடுவார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply