சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடி

பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்கள் சில உருவாகியுள்ளன.எனவே இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்:-

பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடியில் ஈடுபடும் குழுக்கள் பொதுமக்களுடன் தொடர்புகளை பேணி குறிப்பாக பெண்களிடம் திருமணம் தொடர்பான பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. இலங்கை சுங்க திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி, சுங்க திணைக்களத்தின் பெயரையும் உபயோகித்து இக் குழுவினர் வெளிநாட்டவர்கள் போல் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு வெளிநாட்டவர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் இவர்கள் பெறுமதி மிக்க பொருட்களை தாம் தொடர்பு கொள்பவர்களிடம் அவர்களுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்து தமது கொள்ளை முயற்சியை ஆரம்பிப்பதே முதற்கட்ட ஏமாற்று நடவடிக்கையாக உள்ளது.

பின்னர் தம்மை தபால் பொதி சேவையாளர் என தெரிவித்து அவற்றை பெற்றுக் கொள்வதற்கான தீர்வையை செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறும், தீர்வைக்காக குறிப்பிட்ட ஒரு தொகைப் பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். அந்த பணத்தொகையை அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு கூறி பணம் வைப்பிலிடப்பட்டதன் பின்னர் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

இவ்வாறான மோசடி செயல்கள் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும், உள்நாட்டவர்கள் பலரும் கணிசமானளவு பணத்தை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பான தெளிவைப் பொதுமக்கள் அனைவரும் சுங்க திணைக்களங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை தபால் திணைக்களத்தின் 0112328644, 011-2447844 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு வெளிநாட்டு பொதிகளை பெற்றுக் கொள்ளல் தொடர்பான விப?ரங்?களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை இவ்வாறான கொள்ளை குழுக்கள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதோடு, இது போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் பற்றி அறியும் பட்சத்தில் இலங்கை சுங்க திணைக் களத்தின் புலனாய்வு மற்றும் விசாரணை பணியகத்திற்கு 011-2471471 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தெரியப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply