மோதல் பிரதேசத்தில் இன்னமும் 150,000 பேர் உள்ளனர்: ஆனந்தசங்கரி
வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியான மோதல் பிரதேசத்தில் மேலும் 150,000ற்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தமிழர் விடுதலைப் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அங்கிருக்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்பாகத் தன்னிடம் சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த மக்களை வெளி யேற்றி அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தான் நீண்டகாலம் இருந்ததால் அங்குள்ள குடிசனப் பரம்பல் பற்றித் தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, வன்னி மாவட்டத்தைத் தான் பிரதி நிதித்துவப்படுத்திய போது கிளிநொச்சியில் 180,000 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 150,000 வாக்காளர்களும் இருந்ததாகக் கூறினார். இதுவரை வன்னியிலிருந்து 170,000 பேரே இடம் பெயர்ந்திருப்பதால் எஞ்சியவர்கள் எங்கு சென்றார்கள் எனக் கேள்வி எழுப்பியிருக்கும் அவர், எஞ்சியவர்களை மீட்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மக்களை அரசாங்கப் படைகள் வெளியேற்ற முன்னர் 70,000 பேரே அங்கிருப்பதாக அரசாங்கம் கூறியபோது அந்த எண்ணிக்கை தவறு என்பதைத் தான் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டியதாகவும், முதலில் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத போதும் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு 3 இலட்சம் மக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்ததாகவும் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.
எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேச முகவர் அமைப்பொன்றை வன்னிக்கு அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம்கொடுத்து மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு குறிப்பிட்ட முகவர் அமைப்புக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், ஆயுதங்களைக் கைவிட்டுப் பாதுகாப்புத் தரப்பினரிடம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமெனவும் ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply