நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியர்கள் வழக்கு

இங்கிலாந்தில் பணி செய்துகொண்டு வசிப்பதற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இந்திய பணியாளர்கள் அங்குள்ள கோர்ட்டுகளை நாடி உள்ளனர். லண்டனில் திரண்டு வந்து போராட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டில் இந்தியாவை சேர்ந்த டாக்டர்கள், ஆசிரியர்கள், நர்சுகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில் அதிபர்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர்.

 

ஆனால் அவர்களுக்கு சட்டப்படி அங்கு வாழ்ந்துகொண்டு, பணி செய்வதற்கு தேவையான ஐ.எல்.ஆர். என்று அழைக்கப்படுகிற நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மறுக்கப்படுகிறது. இது இந்திய பணியாளர்கள் மத்தியில் ஆதங்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது._

 

ஏற்கனவே இந்த விவகாரத்தில் திறன் வாய்ந்த இந்திய பணியாளர்கள் ஒரே குடையின்கீழ் திரண்டு வந்து கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினார்கள்.

 

இந்த நிலையில் நேற்று லண்டனில் அமைந்து உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்திய பணியாளர்கள், ‘மிகவும் திறமை வாய்ந்த இடம் பெயர்ந்தோர் குழு’ என்ற பெயரில் அணி திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இங்கிலாந்து நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தங்கி இருந்து பணியாற்றி விட்டால், அவர்களுக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அதற்காக விண்ணப்பிக்கிற உரிமை இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அனைவருக்கும் உண்டு.

 

2010-ம் ஆண்டு விசா பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர்கள் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த உரிமை அங்கு மறுக்கப்பட்டு வருகிறது.

 

அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதும், அமெரிக்காவின் ‘எச்1 பி’ விசா பெறுவதும் இப்போது எந்தளவுக்கு சிக்கலாகி உள்ளதோ அதே போன்று இப்போது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெறுவதும் சிக்கலாகி வருகிறது.

 

நியாயமற்ற காரணங்களை கூறி, இந்தியர்களின் விண்ணப்பங்கள் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

 

இது தொடர்பாக அவர்கள் உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக முதல் அடுக்கு தீர்ப்பாயம், மேல் தீர்ப்பாயம் மற்றும் பிற கோர்ட்டுகளில் வழக்குகளை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.

 

அங்கு இந்த நீதி அமைப்புகள்தான் உள்துறை அமைச்சகம், நிரந்தர வசிப்பிட அந்தஸ்து தராதபோது, பாதிக்கப்படுகிறவர்கள் தாக்கல் செய்கிற வழக்குகளை விசாரித்து வருகின்றன.

 

லண்டனில் நேற்று போராட்டம் நடத்திய குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆதித்தி பரத்வாஜ் இந்தப் பிரச்சினை குறித்து கூறும்போது, “இங்கு மிகத்திறன் வாய்ந்த பணியாளர்கள், கிரிமினல்களை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் சரி இல்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. உள்துறை அமைச்சகமானது, சட்டப்பூர்வமாக நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கோரிவருகிற விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கான வழிவகைகளைத்தான் தேடுகிறது” என்று வேதனை தெரிவித்தார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply