பயங்கரவாதம் முடிவுற்றதும் அபிவிருத்தி யுகம் ஆரம்பம் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் ஜனாதிபதி
பயங்கரவாதம் முடிவுற்றதும் உடனடியாகவே பாரிய அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும். இதற்கு அரசு, மாகாண சபைகளின் இணைந்த செயற்பாடு மிக அவசியமானதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.பிரதேச சபை, மாகாண சபை, நகர சபை என பிரிந்து நின்று பொறுப்பற்றுச் செயற்படாமல் அரசாங்கத்தோடு இணைந்து அரசாங்கத்தின் அபிவிருத்திப் பயணத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பது அவசியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.மக்கள் வயிற்றைப் பற்றி சிந்தித்த காலம் போய், நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் யுகம் உருவாகியுள்ளது. அதன் பிரதிபலிப்பே அடுத்தடுத்த தேர்தல் வெற்றியாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேல் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களின் சத்தியப் பிரமாண வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-
முப்பது வருடகால பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த உடனேயே அபிவிருத்திச் செயற்பாடுகள் முனைப்புப் பெறும். நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும். இதனை மாகாண சபைகளால் மட்டும் தனித்து முன்னெடுக்க முடியாது. மாகாண சபை ஒரு பக்கம், பிரதேச சபை ஒரு பக்கம், அரசாங்கம் இன்னொரு பக்கம் என இழுத்தால் நாட்டை முன்னேற்ற முடியாது. நாட்டில் சில பாரிய அபிவிருத்திகளுக்கு இத்தகைய நிலையே தடையாக இருந்துள்ளது. தற்போது பிரதேச சபையும் மாகாண சபையும், அரசாங்கமும் எம்முடையதே. ஒருவர் பொறுப்பைத் தட்டிக்கழிக்க எவருக்கும் உரிமை இல்லை. நாம் சகலரும் இணைந்து பயணிப்பதுடன் அதுவே ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப உறுதுணையாகவும் அமையும்.
நாம் இந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் வாக்குறுதிகள் எதையும் வழங்கவில்லை. எனினும் முன்னெப்போதுமில்லாதவாறு வாக்குகள் எமக்குக் கிடைத்துள்ளன. மக்கள் ஏனைய அனைத்தையும் இரண்டாம் கட்டத் தேவையாக்கி நாட்டைப் பற்றிய சிந்தனைக்கு முன்னுரிமையளித்தமையே இதற்குக் காரணம். இதனால் நாட்டைப் பற்றிச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் செயல் வீரர்கள் என்பதை மக்களுக்கு ஒப்புவிக்க வேண்டும். தத்தமது வாழ்க்கையையன்றி நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில் நாம் அதிக கவனம் செலுத்துவதை மக்கள் உணர வேண்டும்.
வெற்றி என்பது பொறுப்பு என்பதையே குறித்து நிற்கிறது. முன்னெப்போதுமில்லாதவாறு இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன என்பதை உறுப்பினர்கள் உணர வேண்டியது அவசியம். அடுத்தடுத்த வெற்றிகளானது நாட்டு மக்கள் எமது அரசாங்கத்தின் பயணத்தை அங்கீகரிப்பதாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply