கிம் ஜாங் அன் – டிரம்ப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்கும் : தென்கொரியா அதிபர் நம்பிக்கை

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம்12-ந்தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உங்களை சிங்கப்பூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உங்களது சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோத போக்கும் வெளிப்பட்டு இருப்பதால் தற்போதைய சந்திப்பு பொருத்தமானதாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரியா முற்றிலுமாக தகர்த்த நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. “உங்களிடம் எப்போதும், எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயாராக இருக்கிறது” என்று கூறி கிம் ஜாங் அன் ஒருபடி கீழே இறங்கி வந்தார்.

அவருடைய வேண்டுகோளைத் தொடர்ந்து தென்கொரியா டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பை நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார்.

இதையடுத்து, அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திட்டமிட்டப்படி சந்திப்பை நடத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் .அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ந்தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

டிரம்ப் தனது டுவிட்டர் பதிவை வெளியிடும் முன்பாக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் மீண்டும் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் நேற்று தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.

கடந்த முறை சந்தித்து பேசிய எல்லைப்பகுதி கிராமமான பன்முன்ஜோம் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக விரிவான அதிகாரப்பூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன

எனவே, டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந்தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply