முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்திற்கு பல ஏக்கர் பூர்வீக காணியை வழங்கிய 5 தமிழர்கள்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் உள்ள 59.95 ஏக்கர் காணிகளுக்கு உரித்துடையவர்களில் 5 பேர் தங்களது காணிகளை இராணுவத்துக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்பிலவில் படையினர் வசம் உள்ள காணிகளின் விடுவிப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில்  திங்கள்க்கிழமை (03.06.2018) மாலை நடைபெற்றது.

கேப்பாப்பிலவில் படையினர் வசம் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் இராணுவத்துக்கு தங்களுடைய காணிகளை வழங்கி அதற்கான நட்டஈடுகளை பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் காணி உரிமையாளர்களிடம் எழுத்துமூலம் அவர்கள் விருப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்தக் கூட்டம் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலக மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கேப்பாப்பிலவில் 55 பேருக்கு சொந்தமான 59.95 ஏக்கர் காணிகளுக்கு காணி உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் 37 காணி உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இதில் இரண்டு காணி உரிமைளார்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெருமளவானவர்கள் தங்களுக்குக் காணிதான் வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.

மாறாக காணி உரிமையாளர்கள் 5 பேர் தங்களுக்கு காணிக்குரிய நட்டஈடு பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கூட்டத்துக்கு வருகை தராதவர்களுடைய விருப்பங்களை அறிவதற்கு கிராம சேவகர் ஊடாக விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி வழங்குமாறு உதவிப் பிரதேச செயலாளர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply