அணு ஆயுதங்களை அழித்த பிறகே வடகொரியா மீதான தடையை நீக்குவோம் : அமெரிக்கா

வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வந்தன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்தது.இதனால் அமெரிக்காவையும் வடகொரியா பகை நாடாக கருதியது. அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உருவாக்கிய வடகொரியா அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியது.

வடகொரியா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் சமரசம் ஏற்படுத்த சீனா முயற்சித்தது. தென்கொரியாவும் இறங்கி வந்து அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்கு வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பேசினார்கள். அப்போது டிரம்ப்-கிம்ஜாங்உன் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம்ஜாங்உன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து இருந்தது.

இருநாடுகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் இப்போது ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த பொருளாதார தடைகள் உடனடியாக நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பொருளாதார தடை நீடிக்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

தென்கொரியா தலைநகரம் சியோலில் அவர் தென்கொரியா வெளியுறவு மந்திரி, ஜப்பான் வெளியுறவு மந்திரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவுக்கு பிறகு நிருபர்களிடம் கூறிய மைக்பாம்பியோ இந்த கருத்தை தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களை முற்றிலும் வடகொரியா அழிக்க வேண்டும். அவை அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர் தான் நாங்கள் எங்களது பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

சமரசம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா திடீரென இப்படி கூறியிருப்பது சமரச உடன்பாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply