ஜப்பானின் முன்னாள் பிரதமர் – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் கலாநிதி யுக்கியோ ஹடோயாமா கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.இதன்போது ஜனாதிபதியுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பினை நினைவு கூர்ந்தார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தை பாராட்டிய ஜனாதிபதி, மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதற்கான விசேட அழைப்பு ஒன்றினை எதிர்காலத்தில் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

பொல்கஸ்ஹோவிட்ட, தஹம் செவன விகாரையின் சர்வதேச பெளத்த நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சதஹம் சேவா கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜப்பானின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவரது தனிப்பட்ட நிதி அன்பளிப்பில் 17 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இப்புதிய கட்டிடத்திற்கான செலவு ரூபா 2500 கோடிகளாகும்.

தற்போது ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகள் இங்கு கற்பிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் தொழிற் பயிற்சி நிலையம் ஒன்றினை ஆரம்பிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர், இலங்கையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான செயற்திட்டத்திலும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டத்திலும் எதிர்காலத்தில் பங்களிப்பு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தஹம் செவன விகாரையின் சர்வதேச பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வண. சுதுஹும்பொல விமலசார தேரரும் ஜப்பான் பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply