வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை முறிந்துபோனால் அடுத்தது என்ன? : டிரம்ப்
கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கி வந்த வடகொரிய தலைவர் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததுடன், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கும் முன்வந்தார். அதன்படி ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. சமரச ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. அப்போது வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. அதேசமயம் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தும் வகையில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா நடத்தி வந்த ராணுவ ஒத்திகைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா-வடகொரியா இடையே நடக்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அதிபர் டிரம்ப் டுவிட்டர் தளத்தில் அடுத்தடுத்து பதிவு செய்துள்ள கருத்துக்கள் வருமாறு:-
பேச்சுவார்த்தையின்போது போர் விளையாட்டுகளை (ராணுவ ஒத்திகை) நிறுத்திவைக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால் ராணுவ ஒத்திகைக்கு அதிக செலவு ஆவதுடன், உண்மையான பேச்சுவார்த்தை நடக்கும்போது அதற்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும். ஆத்திரத்தையும் தூண்டும். பேச்சுவார்த்தை முறிந்துபோனால் தென் கொரியாவுடனான ராணுவ ஒத்திகையை மீண்டும் தொடங்குவோம். அப்படி நடக்காது என நம்புகிறேன்.
சிங்கப்பூரில் வடகொரிய தலைவரை சந்தித்தபோது அவருக்கு நான் அதிக அளவில் ஆதரவு அளித்ததாக போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது வேடிக்கையானது. இந்த சந்திப்பின் மூலம் உலகில் அமைதி ஏற்பட்டுள்ளது. வடகொரியாவுடனான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை ஆசிய கண்டம் முழுவதிலும் பாராட்டி கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply