வடக்கில் இராணுவ முகாம்களை மூடப்போவதில்லை: இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க

இலங்கையின் சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை போன்று வடக்கில் இராணுவமுகாம்களை மூடப்போவதில்லை என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். பொய்யான ஆதாரமற்ற ஊடக தகவல்கள் காரணமாக மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் இராணுவதளபதி ஊடக அறிக்கையொன்றிலேயே தெரிவித்துள்ளார்.

மாறாக இலங்கை இராணுவத்தின் கடந்த காலங்களையும், நாடு முழுவதும் தற்போது அது முன்னெடுத்துள்ள பணிகளையும் கருத்தில் கொண்டு மக்கள் படையினர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் இராணுவம் எடுக்காது,தேசிய பாதுகாப்பிற்கே அது முக்கியத்துவம் அளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் நாட்டிற்கான அர்ப்பணிப்பு குறித்து பொறமை கொண்டுள்ள சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும்,ஊடக நிறுவனங்களும், இராணுவத்தின் உரிய எண்ணிக்கையை தீர்மானிக்கும் நடவடிக்கை தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக தீயநோக்கம் கொண்ட பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையை பின்பற்றுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தை அதற்கு அவசியமான அளவு எண்ணிக்கை கொண்டதாக மாற்றும் நடவடிக்கைகள் நீண்ட காலமாக இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை அதிலிருந்து விடுவித்து களநடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றோம்,இதன் மூலம் வினைத்திறனை இரட்டிப்பாக்குகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக படைமுகாம்களை நாங்கள் மூடுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply