சென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் – வக்கீல்கள் ஆஜராக மறுப்பு

_சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது. 11 வயது, 5 மாதங்கள் நிரம்பிய அந்த சிறுமி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, காமக்கொடூரர்களின் காமப்பசிக்கு பலியாகி இருக்கிறார்.__

 

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்த சிறுமியின் மூத்த சகோதரி மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில், ஓட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளது. வெகுளித்தனமான அந்த சிறுமி யாரிடமும் அன்பாக பழகக்கூடிய சுபாவம் உள்ளவர்.

 

 

 

அதை பயன்படுத்தி தான் 23 பேர் கொண்ட காமவெறியர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் தோட்டக்காரர் முதல், காவலாளி வரை அந்த சிறுமியை தங்கள் உல்லாசத்துக்கு விருந்து படைக்க வைத்துள்ளனர்.

 

அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிறிய காயங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் மூத்த சகோதரி சென்னைக்கு வந்திருக்கிறார். சிறுமியின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு பிறகுதான் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி விவரமாக கூறியிருக் கிறார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோருக்கு இந்த வி‌ஷயம் தெரிய வர அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

 

 

 

இந்த கொடூர சம்பவம் குறித்து அயானவரம் உதவி போலீஸ் கமி‌ஷனர் சிராஜூதீனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த புகார் மனு பற்றி தெரியவந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ‘போக்சோ’ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

23 பேர் கொண்ட காமவெறியாட்ட கும்பல், சிறுமியை சீரழித்துள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 6 பேர் கைதானார்கள். அடுத்தகட்டமாக மேலும் 12 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 18 பேரில், 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

 

1. முருகே‌ஷ் (வயது 54) – பாளையக்கார தெரு அயனாவரம். 2. பரமசிவம் (60) – அயனாவரம் சி.கே. தெருவைச் சேர்ந்தவர். 3. ரவிக் குமார் (66) – பங்காரு தெரு அயனாவரம். 4. ஜெய்கணே‌ஷ் (23) – வசந்தா கார்டன் முதல்தெரு, அயனாவரம். இவர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 5. பாபு (36) – எஸ்.வி.எம்.நகர், ஓட்டேரி- லிப்ட் இயக்கும் தொழிலாளி. 6. பழனி (40) – காந்திநகர், புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 7. தீனதயாளன் (50) – மேட்டுத்தெரு, அயனாவரம், லிப்ட் இயக்கும் ஊழியர். 8. அபிஷேக் (23) – பழனியப்பா 2-வது தெரு, அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 9. சுகுமாரன் (60) – பாலாஜி நகர், 4-வது மெயின்ரோடு, கதின்மேடு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 10. இறால் பிரகா‌ஷ் (58) – நீல்ஸ் கார்டன், பெரம்பூர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 11. ராஜா (32) – அம்பேத்கர் நகர், அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை செய்பவர். 12. சூர்யா (23) – ராஜாதோட்டம் 2-வது தெரு, புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 13. சுரே‌ஷ் (32) – கன்னியப்பன் தெரு, கொளத்தூர், பிளம்பராக வேலை செய்பவர்.

 

14. ஜெயராமன் (26) – நரசிம்மன் நகர், 3-வது தெரு கொடுங்கையூர், எலக்ட்ரீசியனாக உள்ளார். 15. ராஜசேகர் (40) – வசந்தா கார்டன் 2-வது தெரு, அயனாவரம், வீட்டு வேலை செய்பவர். 16. குணசேகர் (55) – மதுரை பிள்ளைத்தெரு, அயனாவரம், தோட்ட வேலை செய்பவர். 17. உமாபதி (42) – எம்.கே.பி.நகர், காவலாளி வேலை செய்பவர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒருவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

கைதான 17 பேரில், 66 வயது நிரம்பிய லிப்ட் ஊழியர் ரவிக்குமார் தான், முதன் முதலாக சிறுமியிடம் பழகியிருக்கிறார். சிறுமி லிப்ட்டில் செல்லும்போது, ரவிக்குமாரிடம் அன்பாக பேசியிருக்கிறார். அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ரவிக்குமார் கத்திமுனையில் மிரட்டி முதன் முதலாக சிறுமியை தனது காம இச்சைக்கு பணிய வைத்திருக்கிறார்.

 

அதன்பிறகு, ரவிக்குமார் மூலமாக ஒவ்வொருவரின் காமஇச்சைக்கும் சிறுமி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு போதை ஊசிபோட்டும், போதை மாத்திரை கொடுத்தும், ‘செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபட்டனர். சிறுமியிடம் உறவு கொள்வதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. லிப்ட் ஊழியர் ரவிக்குமார், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத்தொடர்ந்து கைதான மற்றவர்களும் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

 

சிறுமியை சீரழித்தவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியிலும், ‘லிப்ட்’டுக்குள்ளும், வைத்து சிறுமியை கெடுத்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத வகையில், மறைவான இடங்களில் வைத்து காமவெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

 

கைதானவர்களில் 7 பேர் 50 வயதை தாண்டியவர்கள். பேரன் பேத்தி கண்டவர்கள் ஆவார்கள். ஈவு இரக்கம் இல்லாமல், இந்த மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் சிறுமியைக் கெடுத்த ரவிக்குமார் சிறுமியிடம் தாத்தா போல் பழகியுள்ளார். அந்த உரிமையில் தொட்டு கட்டிப்பிடித்து விளையாடிய ரவிக்குமார் நாளடைவில் தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட்டார்.

 

சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

 

மதியம் 1.15 மணிக்கு அந்த 17 பேரும் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

அவர்கள் 17 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்த நடைமுறை முடிவதற்கு மதியம் 3 மணி ஆகிவிட்டது. இதன்பின்னர் மதியம் 3.15 மணிக்கு 17 பேரையும் கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டு செல்வதற்காக கோர்ட்டு அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மகளிர் கோர்ட்டு 3-வது மாடியில் செயல்பட்டு வருவதால், அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவே அழைத்துவரப்பட்டனர்.

 

அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் சிலர் குற்றவாளிகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். ஒருகட்டத்தில் குற்றவாளிகள் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் அவர்களை வக்கீல்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்க தொடங்கினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த தாக்குதல் நீடித்தது.

 

தாக்குதலில் சிக்கிய கைதிகள் ‘அய்யோ… அம்மா…’ என்று கதறியபடி தரையில் உருண்டனர். 2 கைதிகள் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டனர்.

 

முதலில் படிக்கட்டில் இறங்கிய 5 குற்றவாளிகள் மட்டுமே வக்கீல்கள் பிடியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்க போலீசார் கடும் சிரமப்பட்டனர். ஒருகட்டத்தில் அவர்களை வக்கீல்களிடம் இருந்து மீட்ட போலீசார், உடனடியாக மீண்டும் அதே கோர்ட்டு அறைக்குள் அழைத்துச்சென்று கதவுகளை மூடினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் ஏராளமான வக்கீல்கள் மகளிர் கோர்ட்டு முன்பு திரண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஜெயராம், ஆனந்தகுமார் சின்ஹா, கலைச்செல்வன், அன்பு ஆகியோர் கோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். அதேபோன்று அங்கு வந்த வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன், வக்கீல் சங்க பிரதிநிதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன், நீதிபதிகள் சுபாதேவி, மஞ்சுளா, ஜெயந்தி, தர்மன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

வக்கீல்களை கலைந்து போக சொன்னால் மட்டுமே குற்றவாளிகளை பத்திரமாக அழைத்து செல்ல முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

 

மகளிர் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் வெளியே அழைத்து செல்லும் அனைத்து வழிகளிலும் வக்கீல்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரவு 7 மணிக்கு மேல் வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர்.

 

இதைத்தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வேனில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் குற்றவாளிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர். வக்கீல் ஒருவர் குற்றவாளிகள் இருந்த வேன் சாவியை பறிக்க முயன்றார்.

 

அப்போது சாவி வேனுக்குள் விழுந்தது. இதைத்தொடர்ந்து சாவியை எடுத்த டிரைவர் வேனை அங்கிருந்து வேகமாக எடுத்துச்சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் வேனை கைகளால் தட்டியபடி ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.

 

பின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதற்கிடையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆக மாட்டார்கள் என்று ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன் அறிவித்து உள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply