சமாதானம் மற்றும் நல்லிணக்கம்: போருக்குப் பின்னான வாழ்க்கை
களைத்துப்போன காலங்களும் சத்தமற்ற ஓலங்களும்
–ஜீவன் தியாகராஜா
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். முன்னர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களில் 88,000 குடும்பங்கள் நீண்டகாலமாக எந்தத் தீர்வுமின்றி இருக்கின்றன. இதற்கும் மேலதிகமாக 2006 ஏப்பிரல் 7ஆம் திகதிக்குப் பின்னர் 300,000ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர்.
அண்மைய மோதல்களால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 150,000ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையில் மோதல்களும், பாதுகாப்பு வலயங்கள், இடைத்தங்கல் முகாம்கள், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கான இடப்பெயர்வுகளும், உயிரிழப்புக்கள், காயமடைதல் மற்றும் வீடு திரும்புதலும் என எல்லாமே ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளன.
இவர்களின் மீட்சிக்கான திட்டங்கள்
தற்போதைய நிலைமையின் பின்னணியில், பல விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன:
� வவுனியாவிலுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு, அவர்கள் இடம்பெயர்ந்த கட்டங்களின் அடிப்படையில் அடிப்டைத் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்.
� முதலீடுகள் மற்றும் நிதியுதவிகள் தொடர்பாக உதவிவழங்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும்.
� அவர்களுக்குச் செவிமடுத்து, கருத்துக்களைக் கேட்டு, ஆலோசனைகளை வழங்கி, உளரீதியான உதவிகளை வழங்கி, தேவைகளின் முக்கியத்துவங்களின் அடிப்படையில் அவற்றுக்கு முன்னுரிமையளித்து, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தல்.
� பாதுகாப்பு வலயங்களுக்குத் தேவையான விநியோகங்களை சிறப்பாக மேற்கொள்வதுடன், அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும்.
�வவுனியாவிலுள்ளவர்களின் நெருக்கமான சனத்தொகை பல்வேறு வழிகளிலும் குறைக்கப்பட வேண்டும்.
� மன்னார் மற்றும் வவுனியாவில் புனர்வாழ்வுக்கான திட்டங்களைத் தயாரிப்பதுடன், வவுனியா வடக்கை மீள்குடியேற்றங்களுக்காகத் திறந்துவிடவேண்டும். வயது முதிர்ந்தவர்கள், வடக்கு முகாம்களில் தமது குடும்பங்களுடன் இருப்போர் மற்றும் மாற்றுவலுவுடையோர் வெளியேற அனுமதிக்கப்படவேண்டும்.
� பாதுகாப்பு மற்றும் மக்களின் நடமாட்டம் ஆகியவற்றுக்கிடையில் சமநிலை பேணப்படவேண்டும்.
� பாதிக்கப்பட்ட நிலங்களில் வெடிக்காத வெடிபொருள்கள் காணப்படும் என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று. இதனை அகற்றுவதற்கு இலங்கை இராணுவம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மேலதிகமாக தென் ஆபிரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து உதவிகள் பெறப்படவேண்டும்.
� குடும்பங்களுக்கு திறன்விருத்தி மற்றும் மீட்சித் திட்டங்கள் அவசியம். எனினும், உணவே முக்கிய குறிக்கோளாகவுள்ளது. இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்போதைய நிலைமையிலிருந்து விடுபடும் வகையில் தமது வருமானங்களை அதிகரிப்பதற்கான வழிகளை WFP, IFAD, ILO, FAO, ICRC ஆகியன தற்பொழுது வழங்கி வருகின்றன.
யாழ்ப்பாணம்
மார்ச் 27ஆம் திகதி வரை வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 5,269 பேர் சென்றிருப்பதுடன், அவர்கள் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 7 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக யாழ் குடாநாட்டிலிருக்கும் மனிதநேய உதவிகளை வழங்கும் சமூகம், உள்நாட்டில் இடம்பெயர்ந்து பாதுகாப்பற்றிருக்கும் மக்களின் உடனடித் தேவைகளையும், புதிதாக உருவாகும் தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்கள் பல்வேறு தரப்பினர் ஊடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் தேவையான தற்காலிக கூடாரங்கள், கழிவகற்றல் வசதிகள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகள், சுகாதார சேவைகள், உடனடித் தேவைக்கான பொருள்கள், குடிநீர், இழந்த சட்டபூர்வ ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல், கல்விக்கான வசதிகள் போன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. இவையே பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள்.
கெயார், மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம், ஹம்டி டம்டி நிறுவனம், வன்முறைகளற்ற நேரடித் திட்டக் குழு, சேவாலங்கா, கனடாவின் உலகப் பல்கலைக்கழக சேவைகள், ஹரிதாஸ்-ஹியூடெக், ஃபோரூட், சர்வதேச மருத்துவக் குழு, நிவாரணங்களுக்கான மெதடிஸ்ட் குழு, வை.ஜி.ஆர்.ஓ. போன்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் யாழ் மாவட்டத்தில் மனிதநேய மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவருகின்றன.
வவுனியா
இலங்கை அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கோரி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வவுனியா மாவட்டத்துக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்துள்ளனர். வவுனியாவிலுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 54,054 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஏ.எஸ்.பி, ஃபோரூட், மல்டெஸர் இன்டர்நெஷனல், நோர்வே அகதிகள் சபை, ஒக்ஸ்பாம், கனடாவின் உலகப் பல்கலைக்கழக சேவைகள், நிவாரணங்களுக்கான ஒன்றுபட்ட மெதடிஸ்ட் குழு, சர்வதேச உதவி, அக்ஷன் எயிட், வேல்ட் விஷன் போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும், மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம், சர்வோதயா, சேவாலங்கா, உள்ளூர் அபிவிருத்தி நிதியம் போன்ற உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளைச் செய்துவருகின்றன.
இந்த உள்ளூர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மனிதநேய உதவிகளை வழங்கிவருவதுடன், சில சமயங்களில் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களுடன் இணைந்தும் செயற்படுகின்றன.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுவலுவுடையவர்களின் விசேட தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
எதிர்காலத்தை நோக்கி
இவர்கள் உடனடியாக மேற்கொண்ட பங்களிப்பைவிட, மீட்சித் திட்டங்களின் போது முக்கியமான பங்களிப்பு வழங்கவேண்டும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மனிதநேய உதவிகளில் மாத்திரம் கவனம் செலுத்தாமல், மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்துச் செல்வதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளும் சேர்த்து முன்னெடுக்கப்படவேண்டும்.
போர்நிறுத்த காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறிப்பிட்டளவு வளர்ச்சியைக் காண்பித்தது. போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரான காலப்பகுதியில் வட மாகாணத்தின் அதியுச்ச வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 12.6 வீதமாகவும், கிழக்கு மாகாணத்தின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.1 வீதமாகவும் காணப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் இவை உயர்ந்தளவில் காணப்பட்டன.
போர்நிறுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சிக்கான பிரதான உந்துசக்தியாக விவசாயத்துறை காணப்பட்டிருந்தாலும், உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளும் கணிசமானளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. நெல் உற்பத்தியானது மோதல்களுக்கு முன்னரான காலப்பகுதியிலிருந்ததைப் போன்ற அறுவடையைக் காண்பித்தது. இலங்கையின் தேசிய ரீதியில் வேலையற்றோர் வீதம் 8.9 வீதமாக இருந்தபோதும், வடமாகாணத்தில் வேலையற்றோர் வீதம் குறைவடைந்து 5.8 வீதத்துக்குச் சென்றது. கிழக்கு மாகாணத்தில் அது 8.4 வீதத்திலிருந்தது.
தனியார், பொது சமூக நிறுவனங்கள்
மோசமான அநீதிகளுக்கு எதிரான உணர்வுகளால் எழும் எதிர்கால முரண்பாடுகளைத் தூண்டுவதிலும், அவற்றைக் கட்டுப்படுத்தவதிலும் புலம்பெயர்ந்து வாழும் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக வடக்கை மையமாகக் கொண்டு மோதல்கள் நடைபெற்றுவந்த அதேவேளை, புலம்பெயர்ந்து வாழ்வோர் வெற்றிபெற்றவர்களுடனோ, தோல்வியடைந்தவர்களுடனோ சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவர்களின் இதயங்களும், மனங்களும் உணர்வுகளுக்குள்ளும், கற்பனைகளுக்குள்ளும் இழுக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலும், நடைபெறவிருக்கும் மோதல்களின் விளைவுகள் எமது எதிர்காலச் சிந்தனையை வடிவமைக்கும். இதனைப் பிழையாகக் கையாண்டால் எதிர்காலத்தில் மேலும் மோதல்களுக்கு அது வித்திடுவதுடன், பகைமையை அது அதிகரிக்கச் செய்யும்.
வெற்றியாளர்களைப் புறந்தள்ளிவிட்டு மோதல்கள் ஒரு முடிவுவரை செல்லும். அது மேலும் பல புதிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.
அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவான ஐ.எம்.எச்.ஓ., மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடாக பின்வரும் உதவிகளைச் செய்து வருகிறது.
கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்குத் திட்டம் ( 4,141,383.42 ரூபாய்)
கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்குத் திட்டம் ( 4,951,428.24 ரூபாய்)
யாழ்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கங்களில் காணப்படும் மருந்துத் தட்டுப்பாடுகளை நீக்குவதற்கான உதவிகளுக்காக ( 7,913,984.02 ரூபாய்)
பார்வையிழந்த சிறுவர்களுக்கான உதவி- எழுதும் இயந்திரம் (97,500.00 ரூபாய்)
சிறுவர்களின் இருதய சிகிச்சைக்கான உதவிகள் (195,355.00 ரூபாய்)
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குத் திட்டம் ( 2,594,934.00 ரூபாய்)
தெற்கின் வெள்ள நிவாரணம்- உடனடி நிவாரணப் பொருள்கள் விநியோகம் (535,036.90 ரூபாய்)
உள்நாட்டில் இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கான மருத்துவ உதவிகள்- திருகோணமலையில் ( 1,018,800.00 ரூபாய்)
முல்லைத்தீவிலுள்ள வன்னிச் சிறுவர்களுக்கான போசாக்குத் திட்டம் 17ஃ3ஃ2009 (3,751,002.00 ரூபாய்)
உள்நாட்டில் இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு சமைத்த உணவுக்கான உதவி பெப்ரவரி-மார்ச் 2009 (8,634,472 ரூபாய்கள்)
இலங்கைப் பிரஜைளுடன் இணைந்து, கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள குழுக்கள் இணைந்து கல்விச் செயற்பாடுகள், பால் விநியோகம் மற்றும் உணவு விநியோகத்துக்கு உதவி வழங்கியுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழ்வோர் மோதல்களைத் தூண்டுவதுடன், அதற்கு நிதியுதவி வழங்குவதாகவும் விரும்பத்தகாத கருத்துக்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் எப்போதும் உதவி வழங்குவதற்கான வழிவகைகளைத் தேடிக்கொண்டேயிருக்கின்றனர். இவ்வாறு உதவிகள் வழங்கப்படக்கூடிய பிரிவுகள் பின்வருமாறு:
பாதுகாப்பு வலயத்திலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான முதலீட்டை வழங்குவதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொடுப்பதிலிருந்து இதனை ஆரம்பிக்கலாம். வீடுகளை அமைப்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறிய தொகைகளிலிருந்து, ஆகக்கூடியது 1000 டொலர் வரையில் முதலீடு செய்யலாம்.
வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு 500 டொலர் வரை வழங்கி, அதனைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரித்து மாதாந்தம் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் வங்கியில் கடனைப் பெறுவதற்கான பாதுகாப்பாக இதனைப் பயன்படுத்தலாம். அனுசரணைகளின் மூலம் சிறுவர்களுக்குக் கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுக்கலாம். ஒரு பிள்ளைக்கு 20 டொலரிலிருந்து 60 டொலர் வரை மாதாந்தம் செலவு செய்து சாதாரணதரம் வரை கல்வி வழங்கலாம்.
800,000 பேர் வரையில் புலம்பெயர் சமூகம் இருக்கின்ற நிலையில், ஆக்கபூர்வமான முறையில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பது எமக்குச் சாத்தியமாகும்.
நாம் காணவிரும்பும் மாற்றத்தைத் தேடுவோம்
கோலாலம்பூரில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பாக ஸ்ரெய்ட் டைம்சுக்கு எழுதியிருக்கும் சிங்கப்பூர் தூதுவர் கேசவபாணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
� நாடு எல்லோருக்கும் சொந்தமானது என்ற உணர்வைக் கட்டியெழுப்புவதன் மூலம், இனம், மதம், மொழி சார்ந்த பிரிவினைகளுக்கு உட்பட்டுள்ள அனைவரையும் இணைக்கும் ஒரு பொதுத் தளத்தை உருவாக்கலாம்.
� ஒரு வித்து அனைவருக்குமாக வளர்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும் பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விட்டுக்கொடுப்புக்கள் நிறைந்த அரசியலை உருவாக்க முடியும்.
� நாட்டின் தலைவர்கள் தாம் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உணர்வை வளர்த்துக்கொள்வது அவசியமானது. இனத்துவத்தைக் காண்பித்து பிரபல்யம் மிக்க தலைவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறலாம் என்றாலும், நாட்டுக்கு ஏற்படப்போகும் அழிவுக்கு அவர்கள் பதில் சொல்லக் கடப்பாடுடையவர்கள் ஆவர்.
� இலங்கையில் துப்பாக்கிகள் மௌனமாக்கப்படுகின்றபோது அதன் விளைவாக மூன்று பயன்கள் இலங்கைக்கு கிடைக்கும். முதலாவதாக, இராணுவத்துக்கான செலவைச் சேமிக்க முடியும், இந்தச் சேமிப்பை அபிவிருத்திக்கும், மக்களை சமாதானச் சூழ்நிலையில் வாழச் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
இரண்டாவது, புலம்பெயர்ந்துவாழும் வளம் நிறைந்த இலங்கையர்களிடமிருந்து முதலீடுகள் அதிகரிக்கும். இந்த முதலீடுகளைப் பயன்படுத்தி சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மூன்றாவதாக, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச முகவர் அமைப்புக்களிடமிருந்து நாடு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும்.
“ஒரு நாடு அந்த நாட்டுக்கு எதிராகவே வாழேந்தாமல் இருப்பதற்கும், டாங்கிகள் உழவு இயந்திரங்களால் வெற்றிகொள்ளப்படுவதற்கும், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தமது சொந்த வைன் மரங்களின் கீழ் இருப்பதற்கும், எவரும் அச்சமின்றி வாழ்வதற்கும், நீதி நீரோடைபோலப் பாய்ந்துசெல்வதற்கும், நேர்மை பலமாக இருப்பதற்கும், கடவுளே எமக்கு உதவிசெய்யும்!” என வணக்கத்துக்குரிய லோறி அடிகளார், ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் கூறியவை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
எமது குழந்தைகளுக்காகவும், நீண்டகாலமாக சாதாரண வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்காகவும் நாம் காணவேண்டிய கனவு இதுவேயாகும்.
நன்றி: சண்டே லீடர் (inllanka)
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply