உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்தார்
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை தேறிவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.அவரது உடல் நிலை பற்றி கவலை அடைந்த தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் 5 நாட்களாக விடிய விடிய காத்து கிடந்தார்கள்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை பார்த்த படங்கள் வெளியிடப்பட்ட பின்புதான் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.
ராகுல் காந்தி கருணாநிதியை பார்க்க வந்த போது அவரது காதில் மு.க.ஸ்டாலின் ராகுல் வந்திருக்கும் தகவலை சொல்வதும் கருணாநிதி கண் திறந்து பார்க்கும் காட்சியும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர்.
இதுபற்றி ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறும் போது, கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளித்தனர். மருந்துகளை ஏற்றுக் கொண்டு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார். தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டின் பேரில் லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற தொற்று நோய் மருத்துவ சிசிச்சை நிபுணர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடலை பரிசோதித்தார். சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும் பார்த்தார்.
தற்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் இதுவே அவருக்கு போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply