கருணாநிதி உடல் அடக்கத்துக்காக 5 மணி நேரத்தில் உருவான சமாதி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் மெரினா கடற்கரையில் கடைசி நேர பரபரப்புக்கு பின்புதான் நடைபெற்றது.முன்னதாக அரசிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க தி.மு.க. கேட்டபோது கோர்ட்டில் வழக்குகள் இருப்பதால் காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்குவதாக தமிழக அரசு கூறிவிட்டது. இதனால் தி.மு.க. சார்பில் இரவோடு இரவாக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

அவசர வழக்காக இதனை எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு காலை 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கியது. 11.30 மணி வரை வக்கீல்கள் வாதம் நடந்தது. 11.30 மணிக்கு மேல் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதி உடல் அடக்கத்துக்கான ஏற்பாடுகளில் துரிதமாக ஈடுபட்டனர். தீர்ப்பு வெளியான உடனேயே பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, அனுஜார்க், கார்த்திகேயன், உமாநாத், சந்தோஷ் பாபு ஆகியோர் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர்.

கோர்ட்டு தீர்ப்பு எப்படி வந்தாலும் இரு விதமான வரைபடத்தை தயாரித்து வைத்திருந்தனர். மெரினாவில் இடம் ஒதுக்க கோர்ட்டு உத்தரவிட்டதும் அதற்கான வரைபடத்தை அதிகாரிகள் கொண்டு வந்து தி.மு.க. நிர்வாகிகளிடம் அதை காட்டி சமாதி அமையும் இடத்தை விளக்கினார்கள். சமாதிக்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

தி.மு.க. மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரிய சாமி, ஏ.வ.வேலு உள்ளிட்டோரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பொக்லைன் எந்திரங்கள், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். குண்டும் குழியுமாக கிடந்த மணல்பரப்பு சமப்படுத்தப்பட்டது. 10 அடி நீளம், 7 அடி அகலம், 6 அடி உயரத்துக்கு செவ்வக வடிவில் பள்ளம் தோண்டப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 4.30 மணிக்கு இந்த பணி முடிவடைந்து சமாதியை சுற்றிலும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் பொதுப் பணித்துறை என்ஜினீயர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் இந்த பணிகளை 5 மணி நேரத்தில் செய்து முடித்தனர். கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கும் போது சமாதியும் தயாராகி விட்டது.

சமாதியின் அடியில் காங்கிரீட் செங்கற்கள் வைத்து கட்டப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான டெண்டுகளும், இருக்கைகளும் போடப்பட்டன.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பம்பரம்போல் சுழன்று செயல்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply