இலங்கை இராணும் இறுதியில் ஏமாற்றத்தை சந்திக்கும் : நடேசன் சூசகம்

ஐரோப்பாவில் கேட்கக்கூடிய செய்மதித் தமிழ் வானொலியில் நேற்று (மே. 7) தொலைபேசி ஊடாக கேட்கப்பட்ட கேள்வி யொன்றுக்கு பதில் அளிக்கும் போது புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் `இலங்கை இராணும் இறுதியில் ஏமாற்றத்தை சந்திக்கும்` என்றார். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகளற்ற வலயத்தில் பொது மக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தி அங்குள்ள மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளில் மறைந்திருக்கும் புலிகள் இயக்க மேல்மட்டத் தலைவர்கள் அங்கிருந்து தப்பிப்போக முடியாத வகையில் அப்பகுதியின் கடற்பரப்பு உட்பட தரை மார்க்கமாக ஐந்து முனைகளில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு திடமான தகவல் வெளியிடும் நிலையில், நடேசனின் சூசகமான இக்கூற்று சற்று கவனம் செலுத்தப்பட வேண்டியது.

கடந்த இரண்டு கிழமைகளில் மட்டும் நூறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேறி உள்ளனர். அம்மக்களோடு மக்களாக நூற்றுக்கணக்கான புலிகள் இயக்க உறுப்பினர்களும் கீழ் மட்ட தலைமைகளும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்துள்ளமை, வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் பதுங்கியிருக்கும் புலிகள் உயரமட்ட தலைமைகள் நடமாட்டம் குறித்த பெருமளவு தகவல்களை படையினருக்கு வழங்கியுள்ள போதும் புலிகளின் தலைவர் பிரபாகரன் `உள்ளேயா வெளியேயா` என்பதில் இருவேறு வாதங்கள் இருக்கவே செய்கின்றன.

முல்லைத்தீவு கடற்கரை பிரதேசத்தில் புலிகளால் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவிக்க, உலகின் மிகப்பெரிய மீட்டுப் பணியென அரசினால் வர்ணிக்கப்பட்ட மாத்தளன் பகுதியில் ஏப்ரல் கடைசி வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது, அப்பகுதியில் இருந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொகையினர் கடல் மார்க்கமாக படகுகள் மூலம் இந்தி்யா செல்ல முயற்சித்துள்னர். அவ்வாறு பயணித்த படகுகளில் ஒன்றில், கடலில் திசைமாறி சென்று உணவில்லாமல் கழித்த ஒன்பது நாட்களில் குறித்த படகில் இருந்த பத்து பேர் பட்டினியால் மரணித்த அதிர்ச்சியான செய்தியை இந்திய தொலைக்காட்சிகளில் சில பதிவு செய்திருந்தன.

கிளிநொச்சிக்கு ஏப்ரல் கடைசியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை ஹெலிகாப்டர்களில் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், அங்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர். அச்சந்திப்பில் 58 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது “நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பிரபாகரன் மோதல் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம்“ எனத் தெரிவித்திருந்தார்.

கடைசித் துண்டு நிலமான வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியை தக்கவைக்க புலிகள் அடுத்தடுத்து கட்டிக்கொண்டே இருந்த மணல் தடுப்பு அரண்களை எல்லாம் படையினர் பீரங்கிகள் மற்றும் பலம்வாய்ந்த கவச வாகனங்களின் துணையோடு தகர்த்தெறிந்து வருகிறனர். நேற்று (மே. 7) புலிகளின் கடைசி மண் அரணும் தகர்ந்த இந்நிலையில், வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் பிரபாகரன் இருக்கிறாரா என்ற சந்தேகம் பொதுவாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் தற்காப்பையும் தாக்குதலையும் பார்த்தால் “மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய” தலைவர்கள் சிலர் அவர்களுடன் இருப்பது புலனாகிறது.

இவைகளின் பின்னணியில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் ஐரோப்பிய செய்மதித் தமிழ் வானொலிக்கு தெரிவித்த `இலங்கை இராணும் இறுதியில் ஏமாற்றத்தை சந்திக்கும்` எனும் கருத்தில் சூசகமாக ஏதாவது சொல்லித் தொலைத்துள்ளாரா? இவரது பதிலின் விரிவான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள கனகாலம் காத்திருக்க தேவை இல்லை.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply