ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 பேரையும் விடுவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16-ந் தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட மனுவை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பரிசீலிக்க மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறி, அந்த ஆணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அத்துடன் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply