கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் சேதம் : எதிர்க்கட்சி தலைவருடன் சென்று ஆய்வு செய்த முதல்வர்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன.
இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும்உடன் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை கேரளா வந்து, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். பின்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply