துணை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார்: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அ.தி. மு.க. உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், தேர்தலை எதிர்கொள்ளவும் கூட்டத்தில் பேசப்பட்டது.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து ஓராண்டுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இன்னமும் வழிகாட்டு குழு அமைக்கப்படவில்லை. எனவே செயற்குழுவில் இது தொடர்பான பரபரப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு பதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

எனக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்சனை வரும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அப்படி ஒரு போதும் நடக்காது. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

ஆட்சியையும், கட்சியையும் நாங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசியே நடத்தி வருகிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்த போது எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றுதான் சொன்னேன். நமக்கு ஆட்சி முக்கியம் அல்ல. கட்சிதான் முக்கியம்.

எனவேதான் எனக்கு கட்சி பதவி மட்டும் போதும் என்றேன். ஆனால் மூத்த தலைவர்கள் அனைவரும் வற்புறுத்தியதால் துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றேன். கட்சிக்காக நான் எதுவும் செய்யத் தயாராக உள்ளேன்.

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. அ.தி.மு.க.வை நாம் இப்போதே தயார்படுதத வேண்டும். அனைவரும் கட்சிப் பணியாற்ற முன்வர வேண்டும்.

மூத்த அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். பாராளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க நானும் துணை முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

கட்சிப் பணிகள் குறித்து நானும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து பேசியே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறோம். கட்சியை மேம்படுத்த வழி காட்டுக்குழு அமைக்க முடிவு செய்தோம். அதுவரை கட்சி பிரச்சனைகளை வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் கவனித்துக் கொள்வார்கள்.

அவர்கள் இருவரும் தினமும் கட்சி அலுவலகத்துக்கு வருவார்கள். கட்சி பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் சொல்லலாம். அதன் பிறகு நாங்கள் முடிவு எடுத்து அறிவிப்போம்.

சமீபத்தில் நான் டெல்லியில் மத்திய மந்திரி நிர்மா சீதாராமனை சந்திக்க சென்றேன். ஆனால் அவர் என்னை சந்திக்க மறுத்து விட்டார். நான் தனிப்பட்ட பன்னீர்செல்வமாக அவரை சந்திக்க செல்லவில்லை.

ஆளும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, துணை முதல்-அமைச்சராக அவரை சந்திக்க சென்றேன். ஆனாலும் அவர் என்னை சந்திக்கவில்லை. என்றாலும் நான் அதை பெரிதுப்படுத்தவில்லை.

என்னைப் பொருத்த வரை ஆட்சியை விட கட்சியே முக்கியமாகும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் வட்டாரத்தில் அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply