மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது

துபாயில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் விவேக் கல்லிதில். கேரளாவை சேர்ந்த இவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த வர்னிகா, தியூதி, பிரணதி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு வயது 12. 3 பேரும் துபாயில் உள்ள டெல்லி தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். விவேக் தனது 3 மகள்களின் பிறந்த நாளுக்கு ½ கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘கேக்’ பரிசளித்துள்ளார்.

துபாய் அல் பர்சாவில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ‘தங்க கேக்’ 22 காரட் ஆபரணத்தங்கத்தில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ‘கேக்’கின் மேற்புறத்தில் உள்ள மலர் வடிவம் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ‘கேக்’, ரூ.19 லட்சம் மதிப்புடையது.
கேரளாவில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி சேகரிக்கப்பட்டு வருவதை விவேக் கல்லிதில் மகள்களில் ஒருவரான பிரணதி அறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் மற்ற சகோதரிகளுடன் பேசி, பிறந்த நாள் பரிசாக தந்தை கொடுத்த ‘தங்க கேக்’கை நிவாரண பொருளாக வழங்க முடிவு செய்து தந்தையிடம் தெரிவித்தார்.

மேலும் ஆடைகள் மற்றும் காலணிகளை நிவாரண பொருட்களாக வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார். மகளின் உதவும் நோக்கத்தை பார்த்து வியந்த விவேக் கல்லிதில் உடனடியாக அந்த ‘தங்க கேக்’கை பணமாக மாற்றி கேரள முதல்–மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார்.
இதுகுறித்து மாணவி பிரணதி கூறியதாவது:–

எனது தந்தையின் அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களின் குடும்பத்தினர் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டின் கூரைகளில் தங்கியிருந்ததாக கூறினர். இதனை கேட்ட பிறகுதான் அங்கு துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

எனவே நான் இந்த ‘கேக்’கை நன்கொடையாக அளித்தேன். எனது வீட்டின் அலமாரியில் வெறுமனே அலங்கார பொருளாக ‘தங்க கேக்’ இருப்பதை விட பல ஆயிரம் பேர்களின் கண்ணீரை துடைத்தால் அதுதான் மதிப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி பிரணதியின் இந்த மனிதாபிமான உதவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply