மலையக மக்கள் முன்னணியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை:வே.இராதாகிருஷ்ணன்
மலையக மக்கள் முன்னணியிலிருந்தோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்தோ விலக போவதில்லை எனவும், இ.தொ.காவில் இணைய போவதில்லையெனவும் உறுதிப்பட தெரிவிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.மலையக மக்கள் முன்னணியில் தொடர்ந்து தலைவராக செயல்பட்டு மலையக மக்களுக்கான சேவையை முன்னெடுப்பேன் என உறுதியுடன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு ஊடகங்களில், பத்திரிகைகளில் நான் இ.தொ.காவுடன் இணைய போவதாகவும், மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக போவதாகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகியதை அடுத்து இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவான பதிலை தெரிவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஹற்றன் அஸ்விக்கா விடுதியில் நேற்று மதியம் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் அனுஷியா சந்திரசேகரன், மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் விஜேந்திரன் உட்பட மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,..
இ.தொ.காவிலிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. இ.தொ.காவுடன் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இது ஒரு சோடிக்கப்பட்ட கதை. இதை யார் சோடித்தார்கள் என்று தெரியவில்லை.
அண்மையில் ஹற்றனில் எனக்கு பாராட்டு விழா இடம்பெற்றது. இது ஒரு பொதுவான நிகழ்வு. இதில் இ.தொ.காவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதை வைத்துக்கொண்டு தான் இ.தொ.காவோடு இணையப் போவதாக கூறிக்கொண்டு பல ஊடகங்கள் இவ்விடயத்தை திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன.
நான் ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலகப் போவதில்லை என்பதை உறுதிப்பட சொல்லுவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தினேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் எனக்கும் உள்ள மூன்று வருட கால உறவில் எந்த ஒரு விரிசலும் இல்லை. அதை போன்று மலையக மக்கள் முன்னணியில் உள்ள உறவிலும் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களது உறவு எதிர்காலத்திலும் நீடிக்கும்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் அமைச்சரிடம், இ.தொ.காவோடு கூட்டணியாக சென்று இணைய போவதாக வெளியில் பேசிக் கொள்கின்றார்களே என கேட்ட பொழுது,
ஐயோ! நான் இ.தொ.காவுக்கு போகவில்லை. கூட்டணியாகவும் செல்லவில்லை. திரும்ப திரும்ப இவ்விடயத்தை கேட்காதீர்கள். இன்றுடன் இவ் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதற்காகவே ஊடகங்களை அழைத்து கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் கவுன்சில் குழு நேற்று காலை கூடியது. எந்தவிதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மலையக மக்கள் முன்னணி ஒரு குடும்பம். குடும்பம் என்றால் சிற்சில பிரச்சினைகள் இருக்கும். அதை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளியார் தலையிட அவசியமும் இல்லை. வெளியாருக்கு சொல்லவும் அவசியம் இல்லை. எந்த கட்சியில் பிரச்சினை இல்லை. மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. இதில் ஜனநாயக முறையில் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க முடியும்.
எவர் வேண்டுமானாலும் தலைவராக வர முடியும். மாகாண சபை தேர்தலில் சந்திரசேகரனின் புதல்வி போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு சந்திரசேகரனின் அபிலாஷைகளை தொடர்ந்தும் நிறைவேற்றவே அவரின் புதல்விக்கு தன்னுடைய பாராளுமன்ற செயலாளராக பதவி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
இது இவ்வாறிருக்க ஊடகங்கள் இன்று சுதந்திரமாக கேள்விகளை கேட்கின்றீர்கள். இதற்கு முன் ஊடகங்களுக்கு ஒரு கட்சியின் பிரச்சினையை கேட்டறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்ததையும் ஞாபகப்படுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply