திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் : பொருளாளராக துரைமுருகன் தேர்வு

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திமுக பொதுக்குழு இன்று காலை கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கூடியது. இதில், கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் அண்ணாவின் புகைப்படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு பொதுச்செயலாளர் க.அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்னர் பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அன்பழகன் அறிவித்தார். அவரும் அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply