லண்டனைத் தளமாகக் கொண்ட சனல்-4தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் இலங்கை அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டார்

லண்டனைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் இலங்கை அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்திகளை சனல்-4 தொலைக்காட்சி கடந்தவாரம் வெளியிட்டிருந்தது. இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்த சனல்-4 தொலைக்காட்சியின் ஆசிய பிராந்திய நிருபர் பரொன் நிக் வோல்ஸ், தயாரிப்பாளர் பேசி டூ, படப் பிடிப்பாளர் மற் ஜயஸ்பர் இந்தச் செய்திகளைச் சேகரித்து, ஒளிப்படக் காட்சிகளுடன் வெளியிட்டிருந்தனர்.

இந்தத் தகவல்களால் அதிர்ச்சியடைந்திருந்த இலங்கை அரசாங்கம், இலங்கை வந்திருந்த சனல்௪ தொலைக்காட்சிக் குழுவினரை திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்தது. கைதுசெய்யப்பட்ட இவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள் என்பதால் கைதுசெய்யப்பட்ட பிரித்தானிய ஊடகக் குழுவினர் மூவரின் விசாக்களும் இரத்துச் செய்யப்பட்டதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிவித்தது. விசா இரத்துச்செய்யப்பட்ட இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பி.பி.அபயக்கோன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply