பரீட்சையில் போன்று வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான பாடத்திட்டம்

பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு கல்விப் பாடவிதானங்கள் அமையப்பெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்டை கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பகூடத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடத்தை நேற்று (10) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை மாணவ, மாணவிகள் ஆராவாரத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பகூடத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி​, அதனை பார்வையிட்டவாறு மாணவர்களுடன் உரையாடினார்.

அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலவசக் கல்வியினால் அதிகளவிலான கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கி வரும் இந்த நாட்டில் மாணவர்கள் தமது வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான அறிவினைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக மிக மோசமான நிலைமையே காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் மிக மோசமான அனுபவங்களை தடுத்தல் தொடர்பாக கல்விமான்கள் முன்னோடிகளாக செயற்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, பெற்றோர்களைப் போன்று ஆசிரியர்களும் இவ்விடயத்தில் கவனத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் பிள்ளைகள் பரீட்சையில் மாத்திரமன்றி வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண அமைச்சர்கள் சந்திம ராசபுத்ர, எச்.டபிள்யு. குணசேன உள்ளிட்டே மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட அதிகளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply