பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புதல்

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் அதிகரித்த நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை. வடகொரிய செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று வடகொரியா சென்றடைந்த அவருக்கு தலைநகர் பியாங்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தென் கொரியா ஜனாதிபதி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமில்லா பிராந்தியமாக மாற்ற இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அத்துடன், 20132ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை இரு நாடுகளும் இணைந்து நடத்துவதற்கான அனுமதியை பெறவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, யோங்பயான் பகுதியில் உள்ள பிரதான அணுஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தென்கொரிய ஜனாதிபதி கூறினார். அமெரிக்காவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடகொரிய தலைவர் கூறினார்.

மேலும், வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஏவுகணை சோதனை தளம் மற்றும் ஏவுதளத்தை வடகொரியா அழிக்கும் என்றும் இரு நாட்டின் தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர். இந்த ஆண்டு தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வார் என்று தென் கொரிய ஜனாதிபதி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply