விடுதலைப் புலிகள் இறகுகள் போன்ற இலகுரக விமானங்கள் மூலம் நாட்டின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர்
அரசியலுடன் தொடர்புபட்ட விடயங்கள் அரசியல் ரீதியாகவே கையாளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்து அதன் ஊடாகத் தீர்வொன்றைப் பொற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ‘டைம்ஸ் நௌவ்’ பத்திரிகையின் ஆசிரியர் சிரிஞ்ஜோய் சௌத்திரிக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் இனமோதல் இல்லையென்பதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஆட்புல ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை எவ்வாறு கையாளமுடியும் என அவர் கோள்வியெழுப்பினார். விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஜனநாயகச் செயற்பாடுகளில் இணைந்துகொள்ள வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.
“விடுதலைப் புலிகள் இறகுகள் போன்ற இலகுரக விமானங்கள் மூலம் நாட்டின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். இவ்வாறான தாக்குதல்கள் விடுதலைப் புலிகள் மோதல்களில் முன்னேறியுள்ளனர் என அர்த்தப்படாது. சிறுவர்களால் கூட இவ்வாறான விமானங்களைச் செலுத்தமுடியும். எமது கவலை என்னவெனில், விடுதலைப் புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டு ஒரு எல்லைக்கு அப்பால் கொண்டுசெல்லப்பட்டால் நாட்டில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கில் ஆங்காங்கே தாக்குதல்களை நடத்துவார்கள்” என ரோகித்த போகல்லாகம குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் பாதுகாக்கப்படக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் கொண்டிருப்பதுடன், வன்னியிலுள்ள மக்களும் இலங்கைப் பிரஜைகள் என்பதால் அனைவரையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மத்திய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க. அழுத்தம்கொடுத்து வருவது பற்றிய உங்கள் கருத்து என்னவெனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
“இவ்வாறான அழுத்தங்களை உள்ளூர் அழுத்தங்கள் என நாங்கள் கருதுகின்றோம். ஜனநாயக நாட்டில் இவ்வாறான அழுத்தங்கள் எழவே செய்யும். ஆயினும், பிராந்தியத்தின் பாதுகாப்பு அல்லது இருதரப்புப் பாதுகாப்பு என வரும்பொழுது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” எனக் கூறியிருந்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply