குளங்களை புனரமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்: ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் எல்லங்கா குள கட்டமைப்பை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைக்கும் பணிகள் இன்று ஜனாதிபதி தலைமையில் மஹவிலச்சிய, நபடகஸ்திகிலிய குளத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக மஹவிலச்சிய மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 17 குளங்கள் புனரமைப்பிற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. புனரமைப்பு செய்யப்படும் ஒவ்வொரு குளத்தையும் அண்மித்ததாக அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் கீழ் விவசாய நடவடிக்கைகள், மீன்பிடி, சுற்றுலா கைத்தொழில், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி மேம்பாடுகள், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
2400 குளங்களை புனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் இலங்கையின் பல மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதன் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள குளங்களின் புனரமைப்பு பணிகள் இலங்கை இராணுவத்தின் பொறியியற் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நபடகஸ்திகிலிய ஹெலம்ப குளம், மஹ மில்லகொல்லேவ, இஹல மில்லகொல்லேவ, இஹல ஹெளம்ப கலஹிடியாவ, துணுமடலாவ, இஹல எத்தாவெவ குளம் ஆகிய குளங்களும் நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இஹல கல்கிரியாகம, திவுல்வெவ, பஹல கல்கிரியாகம, சியம்பலாகெடிய, இஹல கோங்கஸ்திகிலிய, லேனவெவ, நயிவெவ, எலபத்கம வெவ ஆகிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
அரசர்கள் காலம் முதல் உன்னத நீர்ப்பாசன பொறியியல் எண்ணக்கருவாக கருதப்படும் எல்லங்கா முறைமையின் மூலம் கிராமிய குள கட்டமைப்பில் அதிகளவு நீரை தேக்கி வைப்பதற்காக இந்த குளங்களின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்மூலம் தற்போது ரஜரட்ட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதிகளின் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
சுற்றாடலின் சமநிலையை பாதுகாத்தல், நிலக்கீழ் நீர்மட்டத்தை அதிகரித்தல், விவசாயத்துறையின் உற்பத்திகளை அதிகரித்தல், நன்னீர் மீன்பிடி கைத்தொழில் விருத்தி, கிராமிய மட்டத்தில் சுற்றுலா கைத்தொழிலுடன் தொடர்புடைய வாழ்வாதார வழிகளை ஏற்படுத்துவதும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கமாகும்.
மக்களதும் வனஜீவராசிகளினதும் நீர் மற்றும் உணவுத் தேவையை நிறைவேற்றுதல், குறித்த பிரதேசங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், வறுமையை ஒழித்தல், மக்களுக்கும் வனவிலங்குகளுக்குமிடையிலான மோதல்கள் குறைத்தல், மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தல், நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து நீர்ப்பாசன புனரமைப்பு பணிகளையும் உரிய அபிவிருத்தி இலக்கை நோக்கி வழிப்படுத்தல் என்பன இதனூடாக எதிர்பார்க்கப்படும் ஏனைய நன்மைகளாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply