இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அமீராக (தலைவர்) அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கண்டி பொல்கொல்ல NICD மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2018.09.23) நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாட்டின்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றது.
1966ஆம் ஆண்டு புத்தளம் நகரில் பிறந்த அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் கற்றார். 1987ஆம் ஆண்டு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராக இணைந்து ஷரீஆத் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்ற அவர் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளராக இணைந்தார். தற்போது அதன் உதவி அதிபராக பணியாற்றி வருகிறார்.
இளம் வயதில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மத்திய சபை அங்கத்தவராகவும் அதன் செயலாளராகவும் இருந்து அழைப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் அங்கத்தவராக இணைந்து கொண்டார். பல வருடங்கள் மாதம்பை கிளை நாஸிமாகவும் வடமேல் பிராந்திய நாஸிமாகவும் (தலைவர்) கடமையாற்றியுள்ளார். கடந்த எட்டு வருடங்களாக ஜமாஅத்தின் மத்திய மஜ்லிஸுஷ் ஷூராவின் அங்கத்தவராக இருந்துவரும் அவர், கடந்த இரண்டு வருடங்களாக ஜமாஅத்தின் தேச விவகாரங்களுக்கான உதவித் தலைவராகவும் கடமையாற்றி வந்தார்.
மாநாட்டுக்கு நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் 1600 ஆண், பெண் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று காலை 9.00 மணி முதல் நடைபெற்று வரும் இத்தேசிய மாநாட்டில் உதவித் தலைவர்கள், மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா அங்கத்தவர் தெரிவுகளும் இடம்பெறவுள்ளன.
ஒருவர் தொடர்ந்தேர்ச்சியாக நான்கு வருடங்களைக் கொண்ட இரண்டு தவணைக் காலமே அமீராகப் பதவி வகிக்க முடியும் என்ற புதிய யாப்பு மாற்றத்தின் அடிப்படையில் நடைபெற்ற முதலாவது அமீர் தேர்தல் இதுவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply