கவர்னர் பன்வாரிலாலுடன் அற்புதம்மாள் சந்திப்பு : பேரறிவாளனை விடுதலை செய்ய மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந்தேதி அறிவுறுத்தியது.
இதை தொடர்ந்து தமிழக அமைச்சரவை கடந்த 9-ந்தேதி கூடி ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் மாளிகை அறிவித்து இருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று கவர்னர் பன்வாரிலாலை சந்தித்தார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கவர்னரிடம் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் மனு ஒன்றையும் அளித்தார்.
கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரிடம் மனு அளித்தேன். அதனை முழுமையாக படித்து பார்த்தார். நான் கொடுத்த மனுவில் பேரறிவாளன் பரோலில் வந்தபோது எப்படி இருந்தான் என்பதையும் அதே போலவே நடந்து கொள்வார் என்றும் தெரிவித்து இருந்தேன்.
ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தாமசின் கருத்தையும் மனுவில் குறிப்பிட்டு உள்ளேன். வழக்கில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதால் இவர்களை விடுவிக்கலாம் என்று அவர் கூறி இருந்த கருத்தை பதிவு செய்துள்ளேன்.
மேலும் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் கூறி இருந்த கருத்துக்கள் தொடர்பான சி.டி ஒன்றையும் வழங்கினேன் அனைத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.
கவர்னர் எனது கோரிக்கையை கனிவுடன் கேட்டார். மனுவை விரைவில் கவனித்து முடிவு செய்வதாக உறுதி அளித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply