நலன்புரி நிலையங்களில் வங்கிக் கிளைகள் நகைகளைப் பாதுகாக்க பாதுகாப்புப் பெட்டகங்கள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களின் பெறுமதி மிக்க நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அரசாங்க வங்கிகள் பாதுகாப்புப் பெட்டகங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறினார். தமிழர்கள் பெரும்பாலும் தமது பணத்தை தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால், இடம்பெயர்ந்த மக்களின் பெறுமதி வாய்ந்த ஆபரணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“வளையல்கள், தாலி போன்ற ஆபரணங்களையே கூடுதலாகப் பாதுகாப்புப் பெட்டகங்களில் மக்கள் வைத்துள்ளனர். தற்பொழுது வங்கிகள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பாதுகாப்பு பெட்டகங்களை வழங்க ஆரம்பித்துள்ளன” என்றார் அவர். அதேநேரம், அரசாங்க வங்கிகள் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தமது வங்கிக் கிளைகளையும் திறந்துள்ளதாக சார்ள்ஸ் கூறினார். இத்துடன், இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான மனிதநேயத் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பல தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தி அவர்களிடமிருந்து உதவிகளைக் கோரியிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். “நலன்புரி நிலையங்களில் நாம் தற்பொழுது குழுக்கள் குழுக்களாகச் சமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதுடன், தனியான சமையல்களுக்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார் அவர்.

இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்க வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் 165 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான இணைப்பதிகாரி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ கூறியுள்ளார். இதனைவிட இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பவர்களில் 3,000ற்கும் அதிகமானவர்கள் வங்கிகளில் புதிய கணக்குகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply