ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் கட்சித் தலைவர்கள் பல்லேகெல புனர்வாழ்வு நிலையத்துக்கு விஜயம்; நீதி அமைச்சின் செயலாளர் விசேட ஏற்பாடு

முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த குழந்தை போராளிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு என்ன நடந்தது என அறிய முடியவில்லை என பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களை போன்று இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பாரியளவில் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களை பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் சிறீதரன் மற்றும் இக் கட்சிகளின் பிரதிநிதிகள் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் கேட்டு அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் அவர்கள் செய்து கொடுத்திருந்தார்.

புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள இளைஞர்களின் பிரதிநிதியாக மோகன் என்பவர் உரையாற்றினார். அழுத்தங்களுக்கு மத்தியில் விருப்பமில்லாத ஒரு செயலில் நாங்கள் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். ஜனாதிபதி அவர்களும், முன்னாள் இயக்க தலைவரான கருணா, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் வானொலி மூலமாக விடுத்த அறிவித்தலை கேட்டு நாம் சரணடைந்தோம். எனவே எமக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என அனைத்து இளைஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொண்டார்.

புலிகள் எங்களை கைவிட்டுவிட்டார்கள் நாங்களும் அவர்களை கைவிட்டு இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்த கூட்டமைப்பினரும் எங்கள் துன்பங்களில் கைகொடுக்கவில்லை. நீங்களும் எங்களை கைவிட்டு விடாதீர்கள். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply