இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ஆளில்லா 48 விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார். 5-ந் தேதி நடந்த இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன ‘எஸ்-400’ ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஏவுகணைகள், 250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக் கும் திறன் வாய்ந்ததாகும். இந்திய வான்பாதுகாப்பை பலப்படுத்துவதில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கும்.
ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், அண்டை நாடான பாகிஸ்தானை அலற வைத்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்த நாடு இப்போது தத்தளித்து வரும் வேளையில் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்கி குவிக்க முடிவு எடுத்துள்ளது.
அந்த வகையில் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை வாங்கி குவிக்க உள்ளது. இந்த ஆளில்லா விமானங்களை சீனாவின் செங்டு விமான தொழில் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆனால் இந்த 48 ஆளில்லா விமானங்களை சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவாகி உள்ளது. இது குறித்த தகவல்களை பாகிஸ்தான் விமானப்படையின் ஷெர்டில்ஸ் ஏரோபாட்டிக் குழு, தனது அதிகாரப்பூர்வ ‘பேஸ்புக்’, பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த 48 விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது, அவற்றின் விலை என்ன, அவை எப்போது வினியோகம் செய்யப்படும் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த விமானம் முதன்முதலாக விண்ணில் பறந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆளில்லா விமானம் முதன்முதலாக விண்ணில் பறப்பதற்கு முன்பே அவற்றை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எந்தெந்த நாடுகள் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானுக்கு சீனா 48 ஆளில்லா விமானங்களை வினியோகம் செய்யப்போவது இதுவே முதல் முறை.
மேலும் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ‘ஜே.எப். தண்டர்’ என்னும் ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களையும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்குவது பற்றி சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் சாங் ஜாங்பிங் கூறும்போது, “சீனா, இவ்வளவு ஆளில்லா விமானங்களை ஒரு வெளிநாட்டுக்கு விற்பனை செய்வது இது முதல் முறை ஆகும். இது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான ராணுவ உறவை பலப்படுத்தும். அமெரிக்காவின் எம்.கியூ-1 பிரிடேட்டர், எம்.கியூ-9 ரீப்பர் ஆகிய ஆளில்லா விமானங்கள் தான் மிகவும் அதிநவீனமானவை. ஆனால் அவற்றின் விற்பனையை அமெரிக்கா கட்டுக்குள் வைத்துள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் ஆளில்லா விமானங்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உண்டாகும். அவை குறைந்த விலையில், சிறப்பாக செயல்படும்” என்று குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply